×

தமிழ்நாட்டை சேர்ந்தவர் கொல்கத்தா தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் பதவியேற்பு

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நேற்று பதவி ஏற்று கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜீயம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த டி.எஸ்.சிவஞானத்தின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்தது. இதையேற்று டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மே 1ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நாட்டின் பழமை வாய்ந்த கொல்கத்தா நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, சபாநாயகர் பீமன் பானர்ஜி மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் தலைமை நீதிபதி சிவஞானத்தின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். பதவியேற்ற பின் பேசிய தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், “மேற்குவங்க மாநில மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை காப்பதற்கும் எந்த களங்கமும் ஏற்பட விட மாட்டேன்” என்றார்.

The post தமிழ்நாட்டை சேர்ந்தவர் கொல்கத்தா தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : D.S.Sivagnanam ,Tamil Nadu ,Chief Justice of ,Calcutta ,Kolkata ,DS ,Shivanjanam ,Chief Justice ,Kolkata High Court ,Supreme Court ,
× RELATED சண்டை போடுபவர்களுக்கு தகுதியில்லை...