×

மதுரை ஆதீன மட விடுதியை காலி செய்யும் விவகாரம் மனுதாரர் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை ஆதீன மடத்திலுள்ள விடுதியை காலி செய்யும் விவகாரத்தில், ரூ.25 லட்சம் டெபாசிட் செய்யா விட்டால் சட்ட நடவடிக்கையை தொடரலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த இளவரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான தெற்கு மாசிவீதியில் உள்ள இடம் முந்தைய ஆதீனத்தால் எங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த இடத்தில் விடுதி நடத்தி வருகிறோம். தற்ேபாது இந்த இடத்தை நாங்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி அறநிலையத்துறை உதவி ஆணையர் தரப்பில் இடத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்‘‘ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

மதுரை ஆதீனம் தரப்பில், ‘‘அறநிலையத்துறை விதிகளை பின்பற்றாமல் முந்தைய ஆதீனத்தால் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. விதிப்படி 5 ஆண்டுக்கு மட்டுமே குத்தகைக்கு விட முடியும். இதன்படி அந்த இடத்தில் மனுதாரரால் விடுதியை தொடர முடியாது. ஆதீனத்திற்கு ரூ.51 லட்சத்து 93 ஆயிரத்து 798 பாக்கி செலுத்த வேண்டியுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரருக்கு வழங்கப்பட்ட நோட்டீசிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரர் தரப்பில் 2 வாரத்தில் ரூ.25 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும். டெபாசிட் செலுத்த தவறினால் மனுதாரர் எந்த உரிமையும் கோர முடியாது என்பதால் இந்த தடை உத்தரவு தாமாக விலகும். அறநிலையத்துறை உதவி ஆணையர் தரப்பில் சட்டப்படியான நடவடிக்கையை தொடரலாம்’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post மதுரை ஆதீன மட விடுதியை காலி செய்யும் விவகாரம் மனுதாரர் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Adeena Math ,ICourt ,Madurai Adheena Mutt ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...