×

போர், பருவநிலை மாற்றம் காரணமாக 2020ம் ஆண்டில் குறை பிரசவத்தில் 1.34 கோடி குழந்தைகள் பிறப்பு: ஐ.நா. சபை அறிக்கையில் தகவல்

கேப்டவுன்: உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. அதில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டில் 9.9 சதவீத குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010ம் ஆண்டில் 9.8 சதவீதமாக இருந்தது. 2020ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 1.34 கோடி. இதில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன.

கடந்த 2020ல் வங்கதேசத்தில் குறை பிரசவம் அதிகபட்ச அளவாக (16.2 சதவீதம்) பதிவாகி உள்ளது. மலாவி (14.5 சதவீதம்), பாகிஸ்தான் (14.4 சதவீதம்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிரீஸ் (11.6 சதவீதம்), அமெரிக்கா (10 சதவீதம்) ஆகிய அதிக தனிநபர் வருவாய் கொண்ட நாடுகளிலும் குறை பிரசவம் அதிகளவில் பதிவாகி உள்ளது. 2020ம் ஆண்டில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் 45 சதவீதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகளை சேர்ந்தவர்கள்.2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் போர், பருவநிலை மாற்றம், கொரோனா வைரஸ் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய 4 முக்கிய காரணிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகளவில் பாதித்துள்ளன.

உதாரணமாக, காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது தெரியவந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த 10ல் 1 குழந்தை மனித உரிமை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் கர்ப்பிணிகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இடர்பாடுகளை தவிர்க்க கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post போர், பருவநிலை மாற்றம் காரணமாக 2020ம் ஆண்டில் குறை பிரசவத்தில் 1.34 கோடி குழந்தைகள் பிறப்பு: ஐ.நா. சபை அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : UN ,Capetown ,World Health Organization ,UN UN ,Children's Fund ,Unicep ,Mother-Sai, Children's Health Federation ,BMNCH ,Dinakaran ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...