×

வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

கொளுத்தும் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம் வியர்க்குரு. வியர்வை சுரப்பி நாளங்கள் அடைபடுவதால், உள்ளே இருக்கும் வியர்வை, தோலில் வீக்கத்தை உண்டாக்கும். உடலில் ஊசியால் குத்துவது போல் எரிச்சலையும், அரிப்பையும் தரும். எனவே, வியர்க்குரு வராமல் பாதுகாக்கும் வழிகளைப் பார்ப்போம்:

தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். உடலை இறுக்கும் ஆடைகளை தவிர்த்துவிட்டு, பருத்தியால் ஆன தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. கோடை முடியும் வரை ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றிற்கு தடா போட்டு விடலாம். முழுக்கை சட்டை, ப்ளவுஸ், முழங்கை வரை மறைக்கும் உடைகளுக்கு பதில் அரைக் கை வைத்த ஆடைகளை அணியலாம். உடலில் போதுமான நீர்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். அதற்கு, போதுமான நீர் அருந்துவதுடன், நீர்ச்சத்துள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ், மோர், நுங்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

பழங்களில் தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, வெள்ளரிக்காய், திராட்சை ஆகியவற்றை உண்ணலாம். காய்கறிகளால் ஆன சாலட்களை அதிகம் எடுத்துக் கொள்வது உடல் சூட்டை குறைக்கும். ஐஸ் கட்டிகளை, ஒரு மெல்லிய துணியில் சுற்றி வியர்க்குரு இருக்கும் இடங்களில் மெதுவாக வைத்து எடுத்தால் எரிச்சல் குறையும். வியர்க்குருவிற்கு என விற்கும் பவுடர்களை உபயோகிக்கக் கூடாது, அவை தோலின் துவாரங்களை மூடிவிடும்.வியர்க்குரு உள்ள இடத்தில் தயிர் அல்லது கற்றாழை ஜெல்லை எடுத்து தடவி காய்ந்த பிறகு கழுவி வந்தால் வியர்க்குரு மறையும்.

வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாறெடுத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும். சந்தனப்பவுடர், வேப்பிலை, கஸ்தூரிமஞ்சள் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவவும்.இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டியில் ஒரு தேக்கரண்டி பன்னீர்விட்டுக் கலந்து குழைத்து வியர்க்குரு உள்ள இடங்களின் மீது தடவி அரைமணி நேரம் காயவிட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவி வர, வியர்க்குரு மறையும்.

தொகுப்பு : எஸ். விஜயலட்சுமி

The post வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dr ,Koluthum ,Dinakaran ,
× RELATED வைட்டமின் குறைபாடுகள்… கவனம் ப்ளீஸ்!