×

ஸ்ரீசைலம்: அறிந்த தலம் அறியாத தகவல்கள்

ஸ்ரீசைலம்

ஆந்திராவில் அமைந்துள்ள அருள் தலம் இது

12-ல் 1

பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று இங்கு உள்ளது.

பெயர்க்காரணம்

சந்திரவதி எனும் பெண் பக்தை, மல்லிகை மலர்களால் இங்கு சிவனை அர்ச்சித்ததன் காரணமாக, ‘மல்லிகார்ஜுனர்’ எனத் திருநாமம் பெற்றார் ஈசர் இங்கு.

3-ல் ஒன்று

அர்ஜுனம் என்றால் மருதமரம் என்பது பொருள். அர்ஜுனத்தை, அதாவது மருத மரத்தைத் தலப்பெயர்களில் கொண்ட மூன்று திருத்தலங்களில், இந்த ‘மல்லிகார்ஜுனம்’ எனும் ஸ்ரீசைலமும் ஒன்று.மற்ற இரு அர்ஜுனத் திருத்தலங்கள்-மத்தியார்ஜுனம் – திருவிடை மருதூரில் உள்ளது ஒன்று; அடுத்தது புடார்ஜுனம்-திருநெல்வேலியில் உள்ள திருப்புடைமருதூர்.

1

ஜோதிர் லிங்கத் தலங்களில் தேவாரத் திருமுறைப் பதிகங்களைப் பெற்ற மூன்று திருத்தலங்களில், இந்த ஸ்ரீசைலமும் ஒன்று. மற்ற இரு திருத்தலங்கள்-ராமேஸ்வரம், திருக்கேதாரம்.

தலப் பெயர்க் காரணம்

சிலாதமுனிவர் தவம்செய்த திருத்தலம் என்பதால் ‘ஸ்ரீசைலம்’ எனப் பெயர் பெற்றது.

திருநாமங்கள்

மல்லிகார்ஜுனர், ஸ்ரீசைல நாதர், சீபர்ப்பத நாதர் என்பவை, இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசரின் திருநாமங்கள். அன்னையின் திருநாமம் ‘ஸ்ரீபிரமராம்பிகை’.

தல மரங்கள் இரண்டு

அர்ஜுனம் எனும் மருதமரமும்; திரிபலாமரமும் இங்கே தல விருட்சங்களாக உள்ளன.

மூன்றும் 1

மேதி ரவி, ஜுவி எனும் மூன்று மரங்களின் சேர்க்கையே ‘திரிபலா’ மரம் எனப்படும். இங்கே தல விருட்சமாக உள்ள ‘திரிபலா’ மரத்தின் அடியில் தத்தாத்ரேயர் தவம் செய்ததால், இந்த விருட்சம் தத்தாத்ரேய விருட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜப சித்தி-மந்திர சித்தி பெற விரும்புபவர்கள், தத்தாத்ரேயர் அமர்ந்து தவம்செய்து அருள் பெற்ற அபூர்வமான இந்த மரத்தின் அடியில் அமர்ந்து ஜபம் செய்தால், மந்திர சித்தி பெறலாம்.

மூவரில் ஒருவரும் மூன்றில் ஒன்றும்

சம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் எனும் மூவராலும் பாடப்பெற்றது இத்திருத்தலம். சம்பந்தரும் சுந்தரரும் காளத்தியை வழிபட்ட பின் அங்கிருந்தே, வடக்கு நோக்கித் தொழுது, இத்திருத்தலத்தைப் பாடினார்கள். திருநாவுக்கரசர் மட்டும் தம்முடைய திருக்கைலாய யாத்திரை யின் போது, இங்கு வந்து வழிபட்டுப் பாடினார். அதே சமயம், சம்பந்தரும் திருநாவுக்கரசரும் ‘திருப்பருப் பதம்’ என்று குறிப்பிடும் இத்திருத்தலத்தை, சுந்தரர் ‘சீபர்ப்பதம்’ எனக் குறிப்பிடுகிறார்.

மலையில் 8

இங்கே மலையில் – வைடூர்ய சிகரம், மாணிக்க சிகரம், பரவாளி சிகரம், பிரம்ம சிகரம், ரௌப்ய சிகரம், க்ஷேமாசிகரம், மரகத சிகரம், வஜ்ர சிகரம்-எனும் எட்டு சிகரங்கள் உள்ளன.

9-நந்திகள்

இங்கே பிரதம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருடநந்தி, சிவநந்தி, மகா நந்தி, சூரிய நந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி – என ஒன்பது திருநாமங்கள் கொண்ட ஒன்பது நந்திகள் உள்ளனர்.

கோயில்கள் 9

இங்கே பிரமேஸ்வரம், வருணேஸ்வரம், இந்தி ரேஸ்வரம், ஜனார்த்தனேஸ்வரம், சப்த கோடீஸ்வரம், குக்குடேஸ் வரம், ஹேமேஸ்வரம், அக்னேஸ்வரம், மோக்ஷேஸ்வரம் எனும் திருநாமங்களில் ஒன்பது சிவாலயங்கள் உள்ளன.

பாண்டவர்களின் 6

மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகச் சொல்லப்படும், ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக்கல்லும் பன்னிரு கையன் கோயிலும் இங்குள்ள பன்னிரு கையனான சண்முகர் கோயில், பளிங்குக் கல்லால் ஆனது.

சிவராத்திரி

இங்குள்ள பாதாள கங்கையில் சிவராத்திரி அன்று நீராடி, இறைவனைத் தரிசித்து வழிபடுவது மிகவும் விசேஷம். ஏராளமானோர் அவ்வாறு தரிசிக்கிறார்கள்.

கீழும் மேலுமாக

இங்கே சிவபெருமான் சந்நதி கீழே இருக்க, அன்னை பிரமராம்பிகை சன்னதி முப்பது படிகள் உயரத்தில் அமைந்து உள்ளது.

சிவாஜியும் திவ்விய கட்கமும்

மராட்டிய மன்னர் மாவீரன் வீர சிவாஜி, இங்கே வந்து தங்கி வழிபாட்டில் ஈடுபட்டார்; தன்னுடன் வந்த வீரர்களைத் தெற்கு நோக்கி யாத்திரை செல்ல உத்தரவு இட்டார். பத்து நாட்கள் உபவாசம் இருந்து, தீவிரமான பக்தி யாலும் மன வைராக்கியத்தாலும் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்; மனைவி – மக்களை மறந்து, இங்கேயே தங்கிவிடத் தீர்மானித் தார். கூட இருந்தவர்களுக்கு, என்ன செய்வதென்று புரிய வில்லை.

அப்போது அன்னை பிரமராம்பிகை, அன்னை பவானி வடிவத்தில் காட்சியளித்து, ஒரு திவ்விய கட்கத்தை(பெரும் வாளை) சிவாஜியிடம் தந்து, ‘‘உனக்கு உண்டான கடமையைச் செய்! பகைவரை அழித்து வெற்றி யாத்திரை நடத்து!’’ என்று உத்தரவிட்டார். சிவாஜியும் தன் பக்தியின் விளைவாக, இங்கே வடக்கு கோபுரத்தையும் தியான மண்டபத்தையும் கட்டினார்.

அன்று முதல் சிவாஜி, பல வெற்றிகள் பெற்று, ‘சத்ரபதி சிவாஜி’ எனப் பெரும் புகழ் பெற்றார். ஆலயத்தின் உள்ளே, அன்னை சிவாஜிக்கு வீரவாள் வழங்கிய காட்சி, சிற்பமாக உள்ளது.

தொட்டு வணங்கலாம்

இங்கே எந்தவிதமான நிர்பந்தமும் இல்லாமல், அதாவது குளித்து-கால்களை அலம்பிக்கொண்டு சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற நிபந்தனையெல்லாம் இல்லாமல், அனைத்து மக்களும் எந்தவிதமான பேதாபேதமும் இன்றி, மூலவரான ஜோதிர் லிங்கத்தை உச்சியில் தொட்டு வணங்கலாம். அபூர்வமான இந்தத் தரிசனம் அல்லல்களை நீக்கும்.

ஆதிசங்கரரின் நூல் உருவாக்கம்

ஆதிசங்கரரின் அற்புதமான சிவானந்தலகரி எனும் நூல் இங்குதான் உருவானது.

பாக்கியம் பெற்ற நந்தி

நந்தி பகவான் இங்கே தவம்செய்து, சிவபெருமான் அருளைப்பெற்று, அவரைச் சுமக்கும் பாக்கியத்தைப் பெற்றார். நந்தி தவம் செய்த இடம், மலையின் கீழே, ‘நந்தியால்’ என்ற பெயரில் உள்ளது.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post ஸ்ரீசைலம்: அறிந்த தலம் அறியாத தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Srisylam ,Srisilam ,Andhra Pradesh ,Jodir ,Srasilam ,
× RELATED ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில்...