×

ஜிப்மர் மருத்துவமனையின் கட்டண வசூல் நிறுத்தம் அறிவிப்பு: விசிக வரவேற்பு

சென்னை: “கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் நிர்வாகம், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்வதற்கும, அவ்வாறு நியமனம் செய்யப்படுகிறவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் 63 வகையான பரிசோதனைகளுக்கு அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்ததும் இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 03.04.2023 அன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தோம்.

அதன் பிறகு கடந்த மே 5 ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். அதன் அடிப்படையில் இப்போது அந்தக் கட்டண வசூல் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்டண வசூலை நிறுத்தி வைக்கும் ஜிப்மர் நிர்வாகத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காகக் குரல் எழுப்பிய தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி.

ஜிப்மர் மருத்துவமனைக்கான நிதி 2020ல் குறைக்கப்பட்டபோது அதை எதிர்த்ததோடு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று விசிக சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். ஒன்றிய சுகாதார அமைச்சரிடத்திலும் வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில்தான் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதுபோலவே ஜிப்மரில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.

கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் நிர்வாகம், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்வதற்கும், அவ்வாறு நியமனம் செய்யப்படுகிறவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

ஜிப்மரைப் போன்றே தன்னாட்சி அதிகாரம் பெற்ற மருத்துவமனைகளான புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ்; சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதைப் போல ஜிப்மருக்கும் நிதி ஒதுக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும். இதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம், என்று அவர் கூறியுள்ளார்.

The post ஜிப்மர் மருத்துவமனையின் கட்டண வசூல் நிறுத்தம் அறிவிப்பு: விசிக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : JIPMER HOSPITAL ,CHENNAI ,Jipmar ,
× RELATED ஜிப்மர் மருத்துவர் தற்கொலை முயற்சி- பரபரப்பு