×

கஞ்சா வேட்டை 4.0..மாநில எல்லைகளில் விடிய விடிய சோதனை: விரைவில் போலீஸ் ஃபீட்பேக் சிஸ்டம் கொண்டு வரப்படும் என ஏடிஜிபி சங்கர் உறுதி!!

சென்னை : தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வேட்டையில் 4.0ல் மொத்த விற்பனையாளர்களும் கஞ்சா விநியோகம் செய்பவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளுக்கு அதிரடியாக சென்ற தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் மற்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அங்குள்ள சோதனை சாவடிகளில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதை ஆய்வு செய்த அவர்கள் சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை முறைகளை பார்வையிட்டனர்.தொடர்ந்து, காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள இரவு நேர சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர்களிடம் வாகன சோதனை முறை குறித்து கேட்டறிந்தனர். வேலூர் க்ரீன் சர்க்கிள் பகுதியில் ஆய்வு நடத்திய கூடுதல் டிஜிபி சங்கர், அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தார். முன்னதாக வேலூரில் 6 இடங்களில் நிரந்தர வாகன சோதனை சாவடிகள் அமைத்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை கூடுதல் டிஜிபி சங்கர் வெகுவாக பாராட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மாநிலத்தில் கஞ்சா பயன்பாடு குறைந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வருவதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த கஞ்சா வேட்டைகளின் போது திரட்டிய தகவலின் அடிப்படையில் சப்ளையர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் இது தொடர்பாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை அனைத்து காவலர்களும் அறிந்திருக்க வேண்டும், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் விரைவில் போலீஸ் ஃபீட்பேக் சிஸ்டம் கொண்டுவரப்படும்,” என தெரிவித்துள்ளார்.

The post கஞ்சா வேட்டை 4.0..மாநில எல்லைகளில் விடிய விடிய சோதனை: விரைவில் போலீஸ் ஃபீட்பேக் சிஸ்டம் கொண்டு வரப்படும் என ஏடிஜிபி சங்கர் உறுதி!! appeared first on Dinakaran.

Tags : ATGB ,Sankar ,Chennai ,Tamil Nadu ,ADGB ,Dinakaran ,
× RELATED திமுக, அதிமுக, காங்., பாமக நிர்வாகிகள் வீடுகளில் ஐடி ரெய்டு