×

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மோக்கா” புயலாக உருவெடுத்தது : வானிலை ஆய்வு மையம்!!

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அது மேலும் வலுப்பெற்று இன்று இரவு தீவிரப்புயலாக மாறும். அது வங்கதேசம் – ,மியான்மர் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று 9ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

பின்னர் நேற்று காலையில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர், இன்று காலை புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து அது வட- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு தீவிர புயலாகவும் நாளை முற்பகல் அதி தீவிர புயலாகவும் வலுப்பெறும். வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் – மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தபடி வடக்கு நோக்கி புயல் நகர்வதால், தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இந்த நிகழ்வின் காரணமாக இன்று காலை முதல் வங்கக் கடலில் மணிக்கு 70 கிமீ வேகம் முதல், 80 கிமீ வேகத்திலும், இன்று மாலை முதல் மணிக்கு 100 கிமீ வேகத்திலும் இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசும். 12ம் தேதி மாலை முதல் மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னதாக கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதை அடுத்து தமிழக கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு 1, 2, 3 எண் ஏற்றப்பட்டுள்ளன.

The post தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மோக்கா” புயலாக உருவெடுத்தது : வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Tags : South East Bengal Sea ,Mocha ,Meteorological ,Research ,Chennai ,Moka ,Meteorology ,Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12...