×

“ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை விளக்க விழாவில் ₹14.72 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு, மே 11: செங்கல்பட்டு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற சாதனை விளக்க விழாவில், ₹14.72 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற சாதனை விளக்க விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். அதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று முன்தினம் 1200 பயனாளிகளுக்கு ₹14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் அன்பரசன் பேசுகையில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2023ம் ஆண்டு மே மாதம் 7ம் நாளன்று ஈராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி, பல்வேறு நலத்திட்டங்களை மாவட்டந்தோறும் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,200 பயனாளிகளுக்கு ₹14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஈராண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு தரப்பு பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில், காலை உணவு திட்டத்தின் கீழ் 18 லட்சம் தொடக்க பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ₹500 கோடியில் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் சுயமாக தொழில் தொடங்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் “நான் முதல்வன் திட்டம்” செயல்படுத்தப்பட்டு ₹12.72 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 51 பயனாளிகளுக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை வழங்கினார். தோட்டக்கலை – மலைபயிர் துறையின் சார்பாக 23 பயனாளிகளுக்கு வேளாண் விதைகள் மற்றும் மரக்கன்றுகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பாக 11 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 25 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள், பிற துறைகளின் மூலம் 79 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1200 பயனாளிகளுக்கு ₹14.72 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் வழங்கினார்.

பின்னர், செங்கல்பட்டு கலெக்டர் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, அரவிந்த ரமேஷ், பாபு ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 230 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாகிதா பர்வின், ஊரக வளர்ச்சித் முகமை திட்ட அலுவலர் இந்துபாலா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் உதயா கருணாகரன், லத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி பாபு, செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர் சண்முகம், துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

The post “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை விளக்க விழாவில் ₹14.72 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Idilla Keklam Irande Saatchi ,Minister ,Thamo Anparasan ,Chengalpattu ,Eidilla Geklam ,Erande Saatchi ,Idilla Geklam ,D.Mo.Anparasan ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...