×

மனநலம் பாதித்தவர்களை கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு ஒருங்கிணைந்த சேவை, மனநல சிகிச்சை மையத்தில் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை, மே 11: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது. அதேபோல், மனநலன் பாதித்தவர்களுக்கான ஆலோசனை மற்றும் மீட்பு முயற்சிகளுக்கான மனநல அவசர ஆலோசனை மையமும் செயல்படுகிறது.

இந்நிலையில், இந்த மையங்களின் செயல்பாடுகளை நேற்று திடீரென கலெக்டர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகள், மீட்பு வசதிகள், தங்கும் வசதி, காவல் உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவது குறித்து உளவியல்துறை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, பணியிடங்கள் மற்றும் தனியிடங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு 181 உதவி எண் மூலம் சேவை வழங்கப்படுவது குறித்து விளக்கினர்.

அதேபோல், 1098 குழந்தைகளுக்கான உதவி எண், மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு எண்கள் 14567 ஆகிய உதவி எண்களில் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், உதவிகள் கோரும் நபர்களுக்கு இந்த மையத்தில் எந்தெந்த வகையில் உதவிகள் அளிக்கப்படுகிறது எனவும், அதன் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண்களுக்கான பாதுகாப்பினை வலுப்படுத்தும் விதமாக துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் கேட்டுக்ெகாண்டார்.

அதைத்தொடர்ந்து, மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர், அங்கு 18 ஆண்கள், ஒரு பெண் உள்பட 19 பேர் தங்கி சிகிச்சை பெறுவது குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது, திருவண்ணாமலை பகுதியிலும், கிராமப் பகுதிகளிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அனுமதித்து முறையாக சிகிச்சை வழங்க வேண்டும். அவர்களிடம் கருணை உள்ளத்தோடு பணியாற்ற வேண்டும். உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த், மருத்துவமனை ஆர்எம்ஓ அரவிந்தன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மனநலம் பாதித்தவர்களை கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு ஒருங்கிணைந்த சேவை, மனநல சிகிச்சை மையத்தில் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...