×

தச்சை பகுதியில் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி திமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா பேச்சு

நெல்லை,மே 11: பொதுமக்களுக்கு அளித்த வாக்குதிகளை நிறைவேற்றும் கட்சியாக திமுக திகழ்வதாக தச்சை பகுதி சார்பில் சிந்துபூந்துறையில் நடந்த தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் மாலைராஜா பேசினார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தச்சை பகுதி சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த வர்த்தக அணி மாநில இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாலைராஜா பேசுகையில் ‘‘ முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாடல் அரசானது ஆட்சி அமைந்த ஈராண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், வீடு தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் செப். 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் பெண்களுக்கு சொத்தில் உரிமையை கொண்டுவந்தது திமுகதான். இவ்வாறு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சியாக திமுக திகழ்கிறது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்’’ என்றார். கூட்டத்திற்கு பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல தலைவரும் கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கோகிலவாணி வரவேற்றார். இதைத்தொடர்ந்து தலைமைக்கழகப் பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா, ராவணன், உடன்குடி தனபால் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் இளைஞர் அணி வக்கீல் அலிப் மீரான், மாநகர நிர்வாகிகள் அப்துல் கையூம், பூக்கடை அண்ணாத்துரை, பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, கோபி என்ற நமசிவாயம், மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டி, மானூர் ஒன்றியச் செயலாளர் அருள்மணி, தச்சை வட்ட செயலாளர்கள் முருகன், சடாமுனி, முருகன், மனோகரன், பாப்புகுமார், செல்வம், கணேசன், இளைஞர் அணி மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடை, 500 பெண்களுக்கு சேலை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநகர பிரதிநிதி சிவா, இலக்கிய அணி வின்சென்ட் வினோத் நன்றி கூறினர். ஏற்பாடுகளை பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் செய்திருந்தார்.

The post தச்சை பகுதியில் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி திமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Maliraja ,Dizhagam Trade Team ,Iran ,Nellau ,Tamil Nadu ,Sinthupunthurai ,Kazhagam Trade Team ,Dinakaran ,
× RELATED ஹிஜாப் அணியாத பெண்களுக்கு ஈரானில் 10...