×

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னரில் ஆட்டோ சிக்கியது சாலைகளில் மரங்கள் விழுந்தன

கோவை, மே 11: கோவையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டவுன்ஹால், உக்கடம், கெம்பட்டி காலனி, பூமார்க்கெட், காந்திபுரம், ரயில் நிலையம், ப்ரூக்பாண்ட் சாலை, குட்செட் சாலை, பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு 8 மணி அளவில் பயங்கர இடி சத்தத்துடன் கனமழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை எதிரில் இருப்பது கூட தெரியாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கு எடுத்து ஒடியது.

ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி, கிக்கானி ரயில்வே சுரங்க பாலம், வடகோவை சுரங்க பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. பூமார்க்கெட், வெரைட்டி ஹால் சாலை போன்ற பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அவினாசி சாலையில் அலை போல் மழைநீர் காட்சியளித்தன. இதன் காரணமாக, மாநகரின் மேம்பாலம் கீழ்பகுதிகள் சாலைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மழை பெய்து கொண்டிருக்கும் போதே மூடப்பட்டன. இதனால், மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. மேம்பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவித்தனர்.

மழைநீர் வடிகால் நிரம்பி ஆறுகள் போல் மழைநீர் பெருக்கு எடுத்து ஓடி சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நின்றன. லங்கா கர்னர் மேம்பாலம் சுரங்க பாதையில் எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒன்று சிக்கியது. அதனை போலீசார் மீட்டு பயணிகள் மற்றும் ஓட்டுநரை மீட்டனர். இதனிடையே மேம்பாலம் கீழ் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற சூப்பர் சக்கர் வாகனம், அதிக திறன் கொண்ட மோட்டார்கள் போன்றவற்றை கொண்டு மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்றினர்.
சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விடிய விடிய மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணி நடைபெற்றது.

The post கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னரில் ஆட்டோ சிக்கியது சாலைகளில் மரங்கள் விழுந்தன appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Lanka corner ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்