×

14 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம்

திருச்சி, மே 11: அதிமுகவில் உள்கட்சி பூசல் காரணமாக திருச்சி மாவட்ட சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பதவிக்கு பொறுப்பேற்க இருந்த துணைத்தலைவருக்கு எதிராக 14 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால், விரைவில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, இயக்குனர் குழு கலைக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்ட சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலையில் 1,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் தேதி நடந்த தேர்தலில் 15 பேர் தேர்தல் மூலமும், 5 பேர் நியமனம் மூலமும் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றனர். இதில், திருச்சி அதிமுக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சகாதேவ பாண்டியன் தலைவராகவும், திருவெறும்பூர் அதிமுக பகுதி செயலாளர் பாஸ்கர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வகித்து வந்தனர். இவர்களுடைய பதவிக்காலம் வரும் 2024 மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பண்டகசாலை தலைவர் சகாதேவ பாண்டியன் இறந்துவிட்டார். தலைவர் இறந்துவிட்டாலோ, பதவி காலியானாலோ அடுத்ததாக துணைத்தலைவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். அதற்கு இயக்குனர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். பண்டகசாலையின் துணைத்தலைவராக உள்ள பாஸ்கர் தன்னை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முயற்சித்து வந்தார். ஆனால், பாஸ்கருக்கு மற்ற இயக்குனர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன் கூட்டம் நடந்தபோது இயக்குனர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து பதிவு தபால் மூலம் இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் இயக்குனர்கள் கூட்டம் சிந்தாமணியில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில், 14 பேர் பாஸ்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகத்தை கண்காணிக்க விரைவில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, இயக்குனர் குழு கலைப்படலாம் என தெரிகிறது. அதிமுகவில் நிகழும் உள்கட்சி பூசலே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

The post 14 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,AIADMK ,President ,Chintamani Cooperative Store ,Dinakaran ,
× RELATED அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் கொடூர...