×

முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட விவிஐபிக்களின் வாழ்த்து மழையில் தச்சு தொழிலாளியின் சாதனை மகள்: பிளஸ் 2 தேர்வின் நாயகி நந்தினி உருக்கம்

* அப்பாவின் கஷ்டம்தான் தலை நிமிர செய்தது
* பணம், நகை, நிலம் அல்ல… படிப்பு தான் மிகப்பெரிய சொத்து

‘உன் கையை நம்பி உயர்ந்திட பாரு… உனக்கென எழுது ஒரு வரலாறு… உனக்குள்ளே சக்தி இருக்கு… அதை உசுப்பிட வழி பாரு… சுப வேளை நாளை மாலை சூடிடு…’ என்ற பாடலை கேட்டால், திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்ற பிளஸ் 2 மாணவியைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அவர், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்காத ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். 600/600 மதிப்பெண் என அனைத்திலும் சென்டம். நாடே வியக்கும் இந்த சாதனையை படைத்த நந்தினியை அழைத்து வாழ்த்து சொல்ல நேரம் கேட்டு விவிஐபிகள் காத்திருக்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் நந்தினியை நேரில் அழைத்து பாராட்டுகின்றனர். நந்தினியை பாராட்டிய முதல்வர், ‘உனக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தயார்’ என ஊக்கம் அளித்து அனுப்பி உள்ளார். இதேபோல் வாழ்த்திய பிரபலங்களும் நந்தினிக்கு பரிசு மற்றும் உத்வேகம் அளிக்கும் பாராட்டு மழையை பொழிந்துள்ளனர். அப்பாவின் கஷ்டமும், குடும்ப வறுமையும்தான் இன்று தன்னை தலை நிமிர செய்து சாதனை படைக்க வைத்திருப்பதாக மாணவி நந்தினி ஆனந்தமடைகிறார். விஐபிகளை டிவியில் பார்த்த நான், இன்று ஒவ்வொருத்தர் இல்லத்திலும் கால் பதிக்க வைத்தது பணம் அல்ல… படிப்பு என்ற மிகப்பெரிய சொத்துதான் என்று பெருமிதம் கொள்கிறார். ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்பார்கள். விடமுயற்சியால் இன்று ஒட்டுமொத்த நாடே புருவத்தை உயர்த்தி பார்க்கும் நிலையை ஏற்படுத்திய நந்தினி, அவ்வளவு எளிதில் இந்த சிகரத்தை அடையவில்லை. அவர் பட்ட வலிகளும், கஷ்டங்களும் என்ன என்பது பற்றி அவரே தினகரன் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:
உங்களைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் கூறுங்களேன்?
நான் எல்.கே.ஜி துவங்கி 12ம் வகுப்பு வரை திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். அனைத்து வகுப்புகளிலும் நான் தான் முதல் மதிப்பெண் எடுப்பேன். என் தந்தை தினக்கூலி அடிப்படையில் தச்சு வேலை செய்து வருகிறார். அம்மா பானுப்பிரியா வீட்டில் இருக்கிறார். தம்பி பிரவீன்குமார் 7ம் வகுப்பு படிக்கிறார். சொந்தமாக வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம்.

பிளஸ் 2வில் சாதிக்க வேண்டுமென்ற ஆவல் எப்படி ஏற்பட்டது?
அப்பா தச்சுத் தொழிலாளி என்பதால் பெரிய அளவு வருவாய் இல்லை. அப்பா என்னை படிக்க வைக்க ரொம்பவே சிரமப்பட்டார். எங்களுக்காக அவர் அன்றாடம் படும் கஷ்டத்தை, அருகில் இருந்து பார்த்து வந்தேன். எனக்கு ஒரே வெறி, அப்பாவின் கஷ்டத்தை தீர்க்க வேண்டும். ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும். அதற்கு நன்றாக படிக்க வேண்டும். இந்த ஒரே விஷயம்தான் எனது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த உணர்வுதான் என்னை இயக்கியது. இரவு, பகல் என்று பாராமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகமும், கையுமாக படித்துக் கொண்டுதான் இருப்பேன்.

குடும்ப வறுமை சூழல் படிப்பை பாதிக்கவில்லையா?
இன்னொன்றையும் நான் கூற வேண்டும். என் அம்மா மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர். அவரின் மருத்துவ செலவிற்கே மாதம் 5 ஆயிரத்திற்கும் அதிக தொகை கரைந்து விடும். அப்பாவின் சொற்ப வருமானத்தில் இருந்துதான் செலவிட வேண்டிய சூழல். இதில் வீட்டு வாடகை மாதத்திற்கு ரூ.4 ஆயிரம் போய் விடும். குடும்பத்தில் கஷ்ட சூழ்நிலை இருந்தாலும் கூட, அப்பாவோ, அம்மாவோ எனது படிப்பிற்கு எப்போதுமே அவர்கள் தடையாக இருந்ததில்லை.

அப்பாவின் வருமானம் எவ்வளவு? கல்விக்கு செலவிட்டது எப்படி?
அப்பா வேலைக்குப் போனால்தான் சம்பளம். தினச்சம்பளம் 700 ரூபாய் கிடைக்கும். மாதத்தின் பாதி நாட்கள் வேலை கிடைப்பதில்லை. சில நேரம் குறைந்த வருவாயுடன் வீடு திரும்புவதும் உண்டு. ஆனால், அதையெல்லாம் மீறித்தான் என்னையும், தம்பியையும் படிக்க வைத்தார். அதில் அவர் சுணங்கியதில்லை. குடும்ப கஷ்டத்தை தீர்க்க படித்து முன்னேறுவது ஒன்றுதான் வழி என்பதை உணர்ந்தேன். நன்றாக படித்து ஒரு நல்ல நிலைக்கு நான் வந்தால் குடும்பத்தை நாமும் காப்பாற்றலாம் என நினைத்து படிப்பில் தீவிரம் காட்டினேன்.

காலை, இரவு எப்போது அதிக நேரம் படிப்பீர்கள்?
தினமும் அதிகாலை எழுந்து படிப்பேன், பின்னர் டைப் ரைட்டிங் வகுப்பிற்குச் சென்று விட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வேன். பாடங்கள் மனதில் பதியும் வரை முழுமையாக படித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். நள்ளிரவு கடந்து ஒரு மணி, இரண்டு மணி வரையிலும் உட்கார்ந்து படித்துவிட்டு அன்றைக்கு பள்ளியில் எடுத்த பாடங்கள் அத்தனையையும் முடித்து, திரும்பவும் ஒருமுறை படித்து, சந்தேகம் தீர்ந்த பிறகே உறங்கப் போவேன்.

படிப்பை தவிர வேறு ஏதாவது ஆர்வமுண்டா?
சிறு வயது முதலே பள்ளியில் நடக்கும் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் இப்படி அத்தனை போட்டிகளிலுமே கலந்து கொள்வேன். ஏராளமான பரிசுகளையும் பெற்றுள்ளேன். டைப் ரைட்டிங்கில் லோயர், ஹையர் முடித்துள்ளேன். நூலகத்திற்கு சென்று படிப்பதும் உண்டு.

பொழுதுபோக்குக்காக வெளியே செல்வதுண்டா?
வகுப்பில் சக தோழிகளுடன் இயல்பாக பழகினாலும், அவர்கள் வெளியே எங்காவது அழைத்தால் என் படிப்புக்கான நேரம் பாழாகி விடும் என்பதை உணர்ந்து தவிர்த்து விடுவேன். இந்த பயிற்சியும், முயற்சியும்தான் இன்றைக்கு எனக்கான பலனைத் தந்துள்ளது.

உங்களை போன்ற மாணவர்களுக்காக நீங்கள் கூறுவது என்ன?
தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் யாரும் சாதிக்கலாம். பணம், நகை, நிலம் அல்ல சொத்து… படிப்பு தான் நமக்கு மிகப்பெரிய சொத்து என்று சொல்லிச் சொல்லியே அப்பா வளர்த்தார். நன்றாக படி என்ற அவரது அறிவுரையும், அம்மா தந்த அரவணைப்புமே என்னை சாதிக்க வைத்திருக்கிறது. எனது பாட்டியும், ‘படிச்சு முன்னேறணும்மா’ என்று அடிக்கடி சொல்வதும் எனக்குள் மந்திரமாக ஒலிக்கும். இதைத்தான் நானும் அனைவருக்கும் கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘ஆசிரியை தந்த செல்போனே ஆன்லைன் வகுப்புக்கு உதவியது’
மாணவி நந்தினி கூறுகையில், ‘‘எனது வெற்றியில் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. நான் எப்போது பாடங்களில் சந்தேகம் கேட்டாலும், கொஞ்சமும் தளராமல், முகம் சுளிக்காமல் விளக்கிப் பேசி என் சந்தேகத்தை தீர்த்து வைத்தனர். கடந்த கொரோனா காலம் எங்கள் வாழ்க்கையின் மிக மோசமான காலமாகவே இருந்தது. அப்போது ஆன்லைன் வகுப்பு நடந்தது. படிப்பதற்கு ஆன்ட்ராய்ட் போன் கட்டாயம் என்ற நிலையில், என்னிடம் சாதாரண போன் வசதி கூட இல்லாத நிலைதான். என்ன செய்வதென்றே தெரியாமல் கலங்கிப் போய்விட்டேன். இதுபற்றி அறிந்த தமிழ் ஆசிரியை அனுராதா, ஆன்ட்ராய்ட் போன் வாங்கிக் கொடுத்து, ஆன்லைனில் நான் படிக்க உதவி செய்தார். இன்றைக்கு சாதனை மாணவி பெயர் கிடைத்திருக்கிறது. நான் பி.காம். சி.ஏ., படித்து ஆடிட்டராக அந்த துறையிலும் மிகப்பெரிய சாதனையை செய்து முடிப்பது மட்டுமே இப்போதும் என் கவனத்தில் இருக்கிறது’’ என்றார்.

* தந்தையே உலகம்
மாணவி நந்தினி, ஆசிரியை வழங்கிய செல்போனையே இப்போதும் வைத்திருக்கிறார். அந்த செல்போனில் தனது தந்தையின் செல்போன் எண்ணை ‘மை வேர்ல்டு’ என்ற பெயரில் பதிவிட்டு வைத்திருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது, ‘‘அப்பாதான் என் உலகம்… அதனால் தான் அப்படி பதிவு செய்துள்ளேன்’’ என்கிறார்.

* ‘தந்தையாக எனக்கு மகள் கொடுத்த சந்தோஷப்பரிசு’
தந்தை சரவணக்குமார் கூறும்போது, ‘‘படிப்பில் என் மகளுக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். படிப்புக்காக எது, என்ன கேட்டாலும் எந்த கஷ்டப்பட்டாவது, கடன் பட்டாவது நான் வாங்கிக் கொடுத்துடுவேன். மனைவிக்கு மருத்துவச் செலவு அதிகமாகி கையில் காசில்லாமல் போறதுண்டு. அந்த நேரத்தில் கேட்க சங்கடப்பட்டு மகள் அமைதியா இருந்தாலும், நான் அலைஞ்சு திரிஞ்சாவது பணம் வாங்கி படிப்புக்கு கொடுத்துடுவேன். கஷ்டத்தைப் பார்த்து பக்கத்து ஊர்ல இருக்குற நந்தினியோட பாட்டி சரோஜா, தாத்தா ஆறுமுகம் நேர்ல வந்து அவங்க கையில் இருக்கிற காசைக் கொடுத்தும் உதவி இருக்காங்க. என் மகள் இப்போது சாதித்திருப்பது ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த அளவிட முடியாத சந்தோஷப் பரிசு’’ என்றார்.

* ‘முதல்வரின் அன்பான பேச்சு சாதிக்கும் ஊக்கத்தை தருகிறது’
மாணவி நந்தினி கூறும்போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை பாராட்டி, பரிசு தந்தது மறக்க முடியாதது. என்ன உதவி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள். செய்யத் தயாராயிருக்கிறேன் என்று உடன் பிறந்தவரைப்போல அன்பு காட்டி பேசியதுடன், அவரது கனிவான வார்த்தைகள் எனக்கு மேலும் கல்வித்துறையில் சாதிக்கும் ஊக்கத்தைத் தந்திருக்கிறது’’ என்றார்.

The post முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட விவிஐபிக்களின் வாழ்த்து மழையில் தச்சு தொழிலாளியின் சாதனை மகள்: பிளஸ் 2 தேர்வின் நாயகி நந்தினி உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Governor ,Nandini Urukam ,Carpenter ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...