×

பெற்றோர் கொடுமை செய்வதாக 10 வயது சிறுமி பரபரப்பு புகார்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

காடையாம்பட்டி: காடையாம்பட்டி அருகே, பெற்றோர் அடித்து கொடுமை செய்வதாக சிறுமி புகார் தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சி, முள்ளிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் விமல் (30). இவரது மனைவி அஞ்சலை (28). இந்த தம்பதிக்கு 10 வயது மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். விமல் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி அஞ்சலை, கரும்பாலையில் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது தந்தையும், தாயும் தன்னை அடித்து கொடுமை செய்வதாக கூறி, 10 வயது சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி அழுதுகொண்டே பாட்டி வீடான பொட்டியபுரம் கிராமத்திற்கு வந்தாள். இதையறிந்த அப்பகுதி மக்கள், சிறுமியிடம் விசாரித்த போது, தன்னை பள்ளிக்கு அனுப்பாமல் தந்தை அடிப்பதாகவும், தாய் வீட்டு வேலை செய்யக்கூறி அடித்து கொடுமை செய்வதாகவும், அதனால், தன்னை சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் விடுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, சிறுமியை தாயுடன் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதை தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன், ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூக நலத்துறை அதிகாரிகள் முள்ளிசெட்டியப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு சிறுமியின் தந்தை விமல் நடக்க முடியாமல், படுக்கையில் இருந்தார். சிறுமி அவ்வப்போது இப்படித்தான் ஏதாவது கூறிக்கொண்டு செல்வாள் என்றும், பின்னர் வீட்டிற்கு வந்துவிடுவாள் என்றும் தெரிவித்தார்.

அதே போல சிறுமியிடம் கேட்டபோது, அவ்வப்போது அடிப்பார்கள், வீட்டு வேலை செய்வேன், தாய்க்கு சாப்பாடு கொண்டு செல்வேன் என்று சிறுமி கூறினாள். அப்போது டி.எஸ்.பி மற்றும் அதிகாரிகள் விடுதியில் தங்கி படிக்கிறாயா என்று கேட்டபோது ஒப்புகொண்டு, விடுதியில் தங்கி படிப்பதாக கூறினாள். இதையடுத்து சிறுமியை ஓமலூர் நகரில் விடுதியுடன் கூடிய பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post பெற்றோர் கொடுமை செய்வதாக 10 வயது சிறுமி பரபரப்பு புகார்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kadaiyambatti ,
× RELATED ஆடுகள் விற்பனை ஜோர்