×

பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை: பெங்களூருவில் வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன் பேட்டி

பெங்களூரு: நாட்டின் பணவீக்கத்தை குறைக்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக பெங்களூரின் ஜெயாநகரில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு மையத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘என்னோடு வாக்களித்த பொதுமக்களிடம் பேசியபோது, கர்நாடகாவில் பாஜ முழுபெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பது தெளிவாக தெரிகிறது.

எதிர்காலத்தில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் நல்ல உள்கட்டமைப்பு, வணிகம் மற்றும் ஸ்டார்ட் அப்கள் மற்றும் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உகந்த சூழல் உள்ளது. நான் இங்கேயும், டெல்லியிலும் பாஜ அரசுக்கு வாக்களித்துள்ளேன். இதனை இரட்டை இன்ஜின் அரசாங்கம் என அழைக்கிறோம். பணவீக்கம் குறித்து விமர்சிப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கிடையாது. தொடர்ந்து 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பணவீக்க பிரச்னையில் நான் மக்களுடன் இருக்கிறேன். அது குறைய வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளுக்கு உரிமை இல்லை” என்றார்.

The post பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை: பெங்களூருவில் வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Bangalore ,Union Government ,Union Finance Minister ,Elise Sitharaman ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...