×

தாமரைக்கு எம்பி சீட்டை தாரைவார்க்கும் புல்லட்சாமியின் தந்திரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘ேதனிக்காரரை அவரது சொந்த மாவட்டத்துலேயே வரவேற்க ஆட்கள் இல்லாமல் செய்யும் வேலை நடக்குதாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் இலை கட்சியினர் சேலத்துக்காரர் அணியில்தான் அதிகம் இருக்காங்களாம். ஏற்கனவே, இலைக்கட்சியில இருந்த மாவட்ட செயலாளர் இப்ப தேனிக்காரரோட அணியில இருக்காரு. அதே சமயத்துல சேலம்காரர் அணியை சேர்ந்தவங்க யாரும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இல்லையாம். தேனியில அந்த போஸ்டிங் போட சில நிபந்தனைகளை சேலம்காரர் வைத்துள்ளாராம். அதன்படி, ஹனிபீ மாவட்டத்துக்கு இலைக்கட்சி புதுசாக மாவட்ட செயலாளர் பதவி ஆள் போடப்போறங்களாம். அதற்கு முன்னாள் எம்எல்ஏக்களான கம்பம் தொகுதியை சேர்ந்தவருக்கும், போடி தொகுதியை சேர்ந்தவருக்கும் நேரடி போட்டியாம். இந்த போட்டியில் ஒரு காலத்தில் தேனிக்காரரின் நிழலாக இருந்தவரும் களத்தில் இருக்கிறாராம். தேனிக்காரர், குக்கர் தலைவரை சந்தித்து பேசியதை, அவரது ஆதரவாளர்களே ரசிக்கவில்லையாம். நம்ம தலைவர் பெரியாளு, இவரு போய் குக்கர் தலைவரை பார்க்கிறதா என்ற வருத்தத்தில் இருக்காங்க. சின்ன மம்மிக்கு எதிரா தர்மயுத்தம் நடத்தி விட்டு, இப்ப அவரையே புகழ்ந்து தள்ளுவது எங்களை அவமதிக்கிற மாதிரி இருக்கு என்று தேனிக்காரரின் ஆதரவாளர்கள் வேதனையில் இருக்காங்களாம். இதனை சரியாக பயன்படுத்தி தேனிக்காரர், குக்கர் தரப்பு நிர்வாகிகளை கூண்டோடு தங்கள் அணிக்கு தூக்க சொல்லி இருக்காராம் சேலத்துகாரர். யார் அதிகமான நபர்களை அழைத்து வர்றீங்களோ, அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி தர்றேன்னு சொல்லியிருக்காராம். இதனால் கடந்த இரண்டு நாட்களாக ஹனிபீ மாவட்டத்தில், தேனிகாரர் மற்றும் குக்கர் தரப்பு நிர்வாகிகளை ரகசியமாக சேலத்துக்காரர் தரப்பினர் சந்தித்து அணி மாறி வரும்படி பேசி வர்றாங்க. இதுல ஒரு சில விக்கெட்டுகள் விழுந்துள்ளதாம். இந்த விஷயம் கேள்விப்பட்ட சேலத்துக்காரர் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்காராம். விஷயமறிந்த தேனிக்காரர் தனது வாரிசுகள் மூலம் தனது அணி நிர்வாகிகளிடம் பேசுமாறு சொன்னாராம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை எடுபடலையாம். தேனீக்கள் மலருக்கு மலர் தாவுவது போல, ஹனிபீ மாவட்டத்தில் அணி மாற தயாராகிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ தாமரையை பார்த்து புல்லட் பயந்த கதையை சொல்லுங்க, கேட்போம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் கால்பதிக்க தேவையானது மக்களவை சீட் என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் டெல்லியில் உள்ள தாமரை தலைமை. இது தென் மாநிலங்களில் தாமரை வளர உதவும் என்று நினைக்கிறதாம். கூட்டணி அரசு தான் என்றாலும், தாமரையை விட, புல்லட்சாமி கட்சி அதிக மக்கள் பிரதிநிதிகளை வைத்துள்ளது. மேலும் சுயேட்சை மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவோடு, சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கையை காட்டி அதிர வைக்கிறார் புல்லட்சாமி. அதே நேரத்தில் மாநிலத்தில் தாமரை கட்சிக்கு குறைந்த மக்கள் பிரதிநிதிகளே இருக்காங்களாம். அவங்களை புல்லட்சாமி கண்டுகொள்வதில்லை என்றாலும் மத்தியில் தாமரை ஆட்சி இருப்பதால், தங்கள் விரல் அசைவில் புல்லட்டுக்கு ஆட்டம் காட்டி வருகிறார்கள். அந்த விரல் அசைவு மூலம், புதுச்சேரி எம்பி சீட்டை விட்டு கொடுக்க வேண்டும் என தாமரை தரப்பு புல்லட்சாமியிடம் அழுத்தம் திருத்தமாக கேட்டாங்களாம். லோக்கல் ஆட்கள் கேட்டு இருந்தால் மறுத்து இருப்பார். டெல்லியில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று கொண்டு, புதுச்சேரியில் தாமரை எம்பி தேர்தலில் தாராளமாக போட்டியிடட்டும் என்று ஒப்புக் கொண்டாராம். அதை தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்ம ஆட்சிக்கு தொல்லை இல்லை.. இப்போதைக்கு நன்றாக போய்க்கொண்டிருக்கு.. மாநில ஆட்சிதான் முக்கியம். ஒரு எம்பியை வைத்து கொண்டு என்ன செய்வது, அவர்களே தேர்தலுக்கு செலவு செய்து ஜெயித்து கொள்ளட்டும் விடு என்று தன்னை சந்தித்து பேசிய கட்சிக்காரர்களிடம் சொன்னாராம். புல்லட்சாமியின் கிரீன் சிக்னலை தொடர்ந்து, தாமரை தரப்பு முன்கூட்டியே வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாம். தற்போதுள்ள உள்துறை அமைச்சரும், புல்லட்சாமியின் மருமகனான சிவமானவரிடம் இதற்கான அசைன்மென்ட் கொடுத்து இருக்காங்களாம்.
இதனை வெற்றிகரமாக செயல்படுத்த ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நீங்களே வேட்பாளராக மாற வேண்டியிருக்கும் என சொன்னாங்களாம். எம்பி சீட்டுக்காக தற்போது புதுச்சேரி தாமரை தலைவர் ஒரு பக்கம் முயற்சிக்கிறாராம். மேலும் துணைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் சோமபான ஆலை முதலாளி அல்லது புதுச்சேரி தாமரை கட்சியின் நியமன மக்கள் பிரதிநிதி என யாரை எம்பி வேட்பாளராக நிறுத்தலாம் என்று தாமரை தரப்பு யோசிக்கிறதாம். இதில் சிவமானவர் ஓகே சொல்லுபவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதால் இனிப்பை மொய்க்கும் ஈக்களை போல அவரையே சுற்றி சுற்றி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தான் பறித்த குழியில் தானே சிக்கிய தாமரைக்கட்சி நிர்வாகி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை கிணத்துக்கடவு பகுதியில் அரசுக்கு சொந்தமான கல் குவாரிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து அரசின் உரிமம் பெற்றே, கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதே பகுதியை ேசர்ந்த தாமரைக்கட்சி பிரமுகர் ஒருவர், ஒப்பந்ததாரர்களை மிரட்டி, பணம் பறித்து வருகிறாராம். அதாவது, கனிம வளத்துறை அதிகாரிகள் வகுத்துக்ெகாடுத்த அளவுப்படி அல்லாமல் மீறி கனிமங்களை வெட்டி எடுக்கிறீர்கள். இதுபற்றி மேலிடத்தில் புகார் செய்து, உங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம் என மிரட்டி கரன்சி பறித்து வருகிறாராம். ஒரு கட்டத்தில் அந்த ஒப்பந்ததாரர், பணம் ெகாடுக்க மறுத்து விட்டாராம். இதனால், கோபம் அடைந்த அந்த நபர், தானே ஒரு ஆளை தயார்படுத்தி, கனிம வளங்களை லாரியில் கேரளாவுக்கு கடத்தினாராம். வேண்டுமென்றே அந்த நபரை போலீஸ் செக்போஸ்ட்டில் சிக்கவைத்துள்ளார். அந்த நபர், போலீஸ் விசாரணையின்போது, ஒப்பந்ததாரருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தாராம். இதை உண்மை என நம்பிய காக்கி அதிகாரிகள், அந்த ஒப்பந்ததாரரை விசாரணைக்கு அழைச்சாங்களாம். அப்போதுதான், தாமரைக்காட்சிக்காரரின் தில்லுமுல்லு அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்ததாம். இதனால் அதிர்ந்துபோன காக்கி அதிகாரிகள், அந்த தில்லுமுல்லு தாமரைக்கட்சி நிர்வாகியை, தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துட்டாங்க. விரைவில் அவர் ஒன்று… இரண்டு…மூன்று என்று சிறைக்குள் கம்பி எண்ணுவார்னு எதிர்கோஷ்டியினர் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரைக்கு எம்பி சீட்டை தாரைவார்க்கும் புல்லட்சாமியின் தந்திரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullutsami ,Peter ,Lotus ,Bullutzami ,Yananda ,Dinakaran ,
× RELATED முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டின் ஒருபகுதி இடிப்பு..!!