
புதுடெல்லி: ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத போதும் வாட்ஸ்அப், மைக்ரோபோனை பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து அரசு விசாரணை நடத்தும் என்று ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதபோதும் வாட்ஸ்அப் மைக்ரோபோனை பயன்படுத்துவதாக டிவிட்டரின் பொறியியல் பிரிவு இயக்குனர் போட் டாப்ரி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நான் காலை 6 மணிக்கு தான் எழுந்தேன். ஆனால் நான் தூங்கிக்கொண்டு இருக்கும்போதும், வாட்ஸ்அப் பின்னணியில் மைக்ரோபோனை பயன்படுத்துகிறது. என்ன நடக்கிறது?” என்று குறிப்பிட்டு இருந்தார். வாட்ஸ்அப் தனது செல்போனின் மைக்ரோபோனை பயன்படுத்தியது குறித்த ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த டிவிட்டுக்கு பதிலளித்துள்ள ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘‘இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தயாராகி வருகிறது. எனினும் தனியுரிமை மீறல் இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். டப்ரியின் டிவிட்டர் பதிவு வைரலாகி உள்ளது. சுமார் 6.5கோடி பேர் இதனை பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள டிவிட்டர் பதிலில், ‘‘தனது பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் சிக்கல் குறித்து பதிவிட்ட டிவிட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாக தொடர்பில் இருக்கிறோம். இது ஆன்ட்ராய்டில் உள்ள பிழை என நாங்கள் நம்புகிறோம். இது அவர்களின் தனியுரிமை டாஷ்போர்ட்டில் உள்ள தகவல்களை தவறாக பகிர்கிறது. இது குறித்து விசாரித்து சரிசெய்யுமாறு கூகுளை கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.
The post தூங்கும்போதும் மைக்ரோபோன் பயன்பாடு வாட்ஸ்அப் தனியுரிமை மீறல் குறித்து விசாரிக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி appeared first on Dinakaran.