×

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் 350 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிலோ சுறா மீன் துடுப்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காரில் சுறா மீன் துடுப்புகள் ஏற்றிக் கொண்டிருப்பதாக ராமநாதபுரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த உதவி வனப்பாதுகாவலர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் ஒரு காரில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்து சோதனையிட்டனர். இதில் 15 மூட்டைகளில் 350 கிலோ ராட்சத சுறா மீன்களின் காய வைக்கப்பட்ட துடுப்புகள் (பீலிகள்) இருந்தது தெரிய வந்தது. சுறா துடுப்புகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மண்டபம் வேதாளை மற்றும் திருப்புல்லாணியை சேர்ந்த ஒருவரையும் விசாரணைக்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையில் சுறா துடுப்புகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சரக்கு பெட்டியில் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்தது. இவை எதற்காக இங்கு கொண்டு வரப்பட்டது? எங்கு கொண்டுச் செல்ல திட்டமிட்டது என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சுறா மீன் துடுப்புகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சுறா துடுப்புகள் சீனா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சூப்பு மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

The post ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் 350 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram railway ,Ramanathapuram ,Ramanathapuram railway station ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...