×

சென்னை சாலைகள், வாகன நிறுத்துமிடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்திருந்த உரிமைக் கோராத வாகனங்களை கணக்கெடுத்து, விசாரணை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், ஒருநாள் சிறப்பு பணிகள் மேற்கொண்டு, சென்னை பெருநகரில் சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்திருந்த உரிமைக் கோராத 88 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு விவரங்கள் சேகரித்து 16 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும், 107 வாகனங்கள் மீது கு.வி.மு.ச. 102 பிரிவின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சிறப்பு வாகனத் தணிக்கையில் மதுபோதையில் ஓட்டிய 15 வாகனங்கள் உட்பட 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., சென்னை பெருநகரில் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருக்கும் வாகனங்களை கணக்கெடுத்து, விசாரணை மேற்கொண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதன்பேரில், நேற்று (09.05.2023) சென்னை பெருநகர காவல் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத வாகனங்கள் மீது ஒரு நாள் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று (09.05.2023) நடைபெற்ற இச்சிறப்பு சோதனையில் சென்னை பெருநகரில் சாலையோரங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர பகுதிகளில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருந்த உரிமைக் கோராத 79 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகுரக வாகனங்கள் என ஒரே நாளில் மொத்தம் 88 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், ஏற்கனவே கேட்பாரற்று உரிமை கோராமல் இருந்த 192 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 ஆட்டோக்கள் என 196 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காவல் குழுவினர் மேற்படி கைப்பற்றப்பட்டுள்ள மொத்தம் 284 வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு, 16 இருசக்கர வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிமை கோராத, முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத 105 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் என 107 வாகனங்கள் மீது கு.வி.மு.ச. பிரிவு 102ன் கீழ் உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று (09,05,2023) ஒரெ நாளில் மொத்தம் 123 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதர வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், நேற்று (09.05.2023) இரவு சென்னை பெருநகரில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில், 4,576 இருசக்கர, மூன்று சக்கர, இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 15 இருசக்கர வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், முறையான ஆவணங்கள் இல்லாத மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக 31 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Vaahan App மூலம் 780 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு 1 சந்தேக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு பழைய குற்றவாளிகள் அடையாளம் காணும் FRS கேமரா மூலம் 2,701 நபர்கள் சோதனை செய்யப்பட்டது என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

The post சென்னை சாலைகள், வாகன நிறுத்துமிடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்திருந்த உரிமைக் கோராத வாகனங்களை கணக்கெடுத்து, விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Commissioner ,Chennai Metropolitan Guilder ,Chennai Roads ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...