×

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்திய மாணவருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: இங்கிலாந்தில் இருந்து அழைத்து வர நடவடிக்கை

மும்பை: சல்மான் கானுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மருத்துவ மாணவருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அவரது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடி ஒன்றிற்கு, கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ‘பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் உதவியாளர் கோல்டி பிராரை சந்திக்க வேண்டும். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சல்மான் கானுக்கு வெவ்வேறு வழிகளில் கொலை மிரட்டல் வந்ததால், அவருக்கு மும்பை போலீசார் உயர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இந்நிலையில் மின்னஞ்சல் அனுப்பிய நபரின் அடையாளத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர், இங்கிலாந்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் இந்திய மாணவர் ஆவார்.

அரியானாவை சேர்ந்த அவர், இங்கிலாந்து கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்தாண்டு இறுதிக்குள் அவர் இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது. அதனால் அவருக்கு எதிராக மும்பை காவல்துறை சார்பில் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவர் இந்தியா திரும்பும் போதோ, அல்லது இங்கிலாந்தில் இருந்து இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.

The post சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்திய மாணவருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: இங்கிலாந்தில் இருந்து அழைத்து வர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,England ,Mumbai ,UK ,
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...