×

கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்: வாக்குப்பதிவுக்குக்கிடையே கர்நாடகா தேர்தலில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்குப்பதிவு நேரம் முடிவடைவதற்கு முன்னரே வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து சென்றதாக நினைத்து கிராமமக்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில், அதனை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம், பசவன்பாகேவாடி தாலுகாவில் உள்ள மசபினாலா கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கமாக தேர்தல் அதிகாரிகள் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவசம் வைத்திருப்பர். ஏனென்றால் வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்படும்பட்சத்தில், அதற்கு மாற்றாக வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வாக்குப்பதிவு தொடரப்படும்.

இந்த நிலையில், அந்த குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து, கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரத்தை வேறு பகுதிக்கு எடுத்து சென்றபோது, கிராமமக்கள் அங்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களை எடுத்து செல்வதாக நிலைத்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். ஆனால் அங்குள்ள அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த அந்த கிராமமக்கள் தேர்தல் அதிகாரிகளின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்து ரகளை செய்தனர்.

மேலும் தேர்தல் அதிகாரிகளின் வாகனத்தின் மீதும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடப்பதாக நினைத்து கிராமமக்கள் இதுபோன்றன செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் சரியான விளக்கமளிக்கவில்லை என கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்: வாக்குப்பதிவுக்குக்கிடையே கர்நாடகா தேர்தலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் சோகம்!: டிப்பர் லாரி...