×

ஜோலார்பேட்டை அருகே மழையால் குடியிருப்புகளுக்குள் நுழைந்த தண்ணீர்-கழிவுநீர் கால்வாய் இல்லாததால் அவதி

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே மழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் நுழைந்தது. மேலும், கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக காலையில் வெயிலும், மாலையில் மழையும் இருந்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பி சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை நகர், லட்சுமி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மாலை நேரத்தில் பெய்து வரும் மழையால் கால்வாய் வசதி இல்லாமல் மழைநீர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால், குழந்தைகளுடன் குடும்பத்தினர் மழைநீரை அகற்றி வருகின்றனர்.

மேலும், அண்ணாவிடப்பட்டி சாலையில் உள்ள பெரிய கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீரும் செல்லாமல் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பெரிய கால்வாயை தூர்வார வேண்டும். கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜோலார்பேட்டை அருகே மழையால் குடியிருப்புகளுக்குள் நுழைந்த தண்ணீர்-கழிவுநீர் கால்வாய் இல்லாததால் அவதி appeared first on Dinakaran.

Tags : Zolarbate ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!