×

விராலிமலையில் கோலாகலம் மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா-ஏராளமானோர் நேர்த்திக்கடன்

விராலிமலை : விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், கரும்பு தொட்டில் கட்டியும், தீ மிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயில் பல்வேறு சிறப்புகள் பெற்ற தலமாகும், வடக்கு பார்த்து அமர்ந்துள்ள இக்கோயில் தெய்வம் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை தொடங்கும் விழாவில் மூன்றாம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலும், நான்காம் செவ்வாய் திருவிழா நடைபெறும். சித்திரை 8ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், முளைப்பாரி எடுத்தும், கரும்பு தொட்டில் கட்டியும், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

முன்னதாக கடந்த மே, 2ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது, அன்றில் இருந்து தினமும் காலை, மாலை இருவேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். உபயதாரர்கள் சார்பில் மண்டகபடி விழா நடத்தப்பட்டு தினந்தோறும் பொங்கல், புளியோதரை, சுண்டல், பானகம், நீர்மோர் என பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவின் 8ம் நாளான நேற்று, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூ குழியில் (தீ குண்டம்) நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டி, அங்கப்பிரதட்சணம், பால்குடம், முளைப்பாரி சுமந்து வந்து கோயிலில் வழிபாடுகள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 9ம் திருவிழாவான இன்று (மே10) ஆடு, கோழி பலியிடுதல் நிகழ்ச்சியும், மாலையில் இளைஞர்களின் படுகளம் விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான போலீசார் விராலிமலை முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

The post விராலிமலையில் கோலாகலம் மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா-ஏராளமானோர் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Kolagalam Meikkannudayal Temple Painting Festival ,Viralimalai ,Viralimalai Meikkannudayal temple ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்