×

எதையும் வித்தியாசமாக செய்யவில்லை: ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 54வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 68, கேப்டன் டூபிளசிஸ் 65 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில், இஷான்கிஷன் 42 (21பந்து) கேப்டன் ரோகிதசர்மா 7 ரன்னில் வெளியேற சூர்யகுமார் யாதவ் 35 பந்தில், 7 பவுண்டரி, 6 சிக்சருடன் 83 ரன் விளாசினார். 16.3 ஓவரில் மும்பை 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஏற்கனவே அடைந்ததோல்விக்கு பழிதீர்த்தது.

நேஹால் வதேரா 52(34பந்து), கேமரூன் கிரீன் 2 ரன்னில் களத்தில் இருந்தனர். சூர்யகுமார் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 11 போட்டியில் 6 வெற்றிகளுடன் மும்பை 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. மும்பை எஞ்சிய 3 போட்டியில் 2 வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆர்சிபி, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ், குஜராத் ஆகிய அணிகளை வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், இது ஒரு நல்ல பிட்ச். யாரும் ரன் அடிக்கலாம். இஷான், சூர்யா, வதேரா நன்றாக ஆடினர். ஆர்சிபியை 200க்குள் கட்டுப்படுத்தியது பெரிய முயற்சி. இல்லையெனில் 220 அல்லது அதற்கும் மேல் எடுத்திருப்பர். பாதுகாப்பான ரன் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. கடந்த நான்கு ஆட்டங்களிலும் 200க்கு மேல் அடித்துள்ளோம்.

பேட்டர்கள் ரிஸ்க் எடுத்து 200க்கு மேல் ஸ்கோரைத் துரத்துகிறார்கள், என்றார். ஆட்டநாயகன் விருது பெற்ற சூர்யகுமார் கூறுகையில், “அணியின் பார்வையில்இந்த வெற்றி மிகவும் தேவை. சொந்த மண்ணில் வெற்றியடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை வீழ்த்த ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதாவது வேகத்தை குறைத்து மைதானத்தின் பெரிய பக்கத்தில் என்னை அடிக்க வைக்க பார்த்தார்கள். நான் வதேராவிடம் பந்தை கேப்பில் அடித்து பலமாக ஓடுவோம் என்று கூறினேன். என்னுடைய ரன்கள் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நாங்கள் திறந்த வலையில் பயிற்சி செய்கிறோம். எனக்கு என் ஆட்டம் தெரியும். நான் எதையும் வித்தியாசமாக செய்யவில்லை” என்றார்.

20 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்

தோல்வி குறித்து பெங்களூரு கேப்டன் டூபிளசிஸ் கூறுகையில், நாங்கள் 20 ரன் குறைவாக எடுத்துவிட்டோம். 220 ரன் சவாலாக இருந்திருக்கும். கடைசி 5 ஓவரில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. இது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. சூர்யகுமார் சிறப்பாக இருக்கும்போது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம், என்றார்.

The post எதையும் வித்தியாசமாக செய்யவில்லை: ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,Mumbai ,Mumbai Indians ,Royal Challengers ,Bengaluru ,54th ,IPL ,Wankhede stadium ,Dinakaran ,
× RELATED சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை