×

உப்போடை நீர்வரத்து கால்வாயில் கலக்கும் ரசாயன கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு-தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

சாத்தூர் : சாத்தூர் உப்போடை வரத்து கால்வாயில் குடியிருப்பு பகுதிகள், ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விளை நிலங்கள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்தூர் அருகே ஏ.இராமலிங்காபுரம் பாசன கண்மாய், அணைக் கரைப்பட்டி வேண்டாம் குளம் பாசன கண்மாய்களில் தேக்கப்படும் தண்ணீரை வைத்து கத்தாளம்பட்டி, ராமலிங்காபுரம், அணைக்கரைபட்டி, வாழவந்தாள்புரம் ஆகிய கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

மழை நீரானது சிவகாசியில் இருந்து வரும் உப்போடை வரத்து கால்வாய் வழியாக முத்தாள்நாயக்கன்பட்டி, சிந்தப்பள்ளி, வெங்கடாசலபுரம், என்.ஜி.ஓ.காலனி வழியாக பயணித்து ஏ.இராமலிங்காபுரம், அணைக்கரைப்பட்டி வேண்டாம் குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று சேறுகிறது. கண்மாய்களில் தேங்கும் தண்ணீரை வைத்து விவசாயிகள் கடந்த 60 ஆண்டுகாலமாக நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகள் பருவ மழை நன்றாக பெய்து கண்மாய்களில் விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் ஆர்வத்துடன் விவசாயம் செய்தனர். ஆனால் நெற் பயிர்கள் போதியளவு வளர்ச்சி இல்லாததால் எதிர்பார்த்த அளவுக்கு நெல் விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.

இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்ணை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், அந்த மண்ணில் முளைப்பு திறன் சத்து மிக குறைந்து காணப்படுவதாகவும், நிலத்தில் ரசாயன தன்மை அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.முத்தால்நாயக்கன்பட்டி, சிந்தப்பள்ளி, வெங்கடாசலபுரம் பகுதியில் இருக்கும் குடியிருப்புகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அப்பகுதியில் இருக்கும் ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீர் உப்போடையில் சென்று சேர்கிறது. இந்த கழிவு நீர் மழை காலங்களில் உப்போடையில் செல்லும் மழை நீரில் கலந்து கண்மாய்களுக்கு சென்றுவிடுகிறது.

கண்மாய் நீரை விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைக்கும் நெற்பயிருக்கு பாய்ச்சுவதால் தண்ணீரில் கலந்திருக்கும் ரசயானப் பொருட்கள் நிலத்தில் இருக்கும் மண்ணை முளைப்பு திறன் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. இதனால் பயிர்கள் போதியளவு வளர்ச்சி அடையாமல் இருந்ததாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். எனவே வெங்காடசலபுரம், முத்தால்நாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரை ஊராட்சி நிர்வாகம் மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post உப்போடை நீர்வரத்து கால்வாயில் கலக்கும் ரசாயன கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு-தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uppodai ,Chhattur ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்