×

கோடை விடுமுறையை முன்னிட்டு ஆழியார், வால்பாறை, டாப்சிலிப் வரும் சுற்றுலா வாகனங்கள் தீவிர சோதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, கோடை விடுமுறையையொட்டி வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின் அனுப்பப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த 2022ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை சில மாதமாக தொடர்ந்து பெய்ததால், வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் செழிப்புடன் காணப்பட்டது.

மேலும், நீரோடைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து அருவிபோல் பாய்ந்தது. ஆங்காங்கே உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருந்தது. ஆனால், இந்தாண்டு துவக்கத்தில் இருந்து மழையின்றி, பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், வனத்தில் உள்ள மரக்கிளைகளில் இருந்து இலைகள் உதிர ஆரம்பித்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக பசுமை குறைந்து பெரும்பாலான இடங்களில் மரங்கள் காய்ந்தது.

இதனால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப், ஆழியார் அருகே கவியருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, கடந்த சில மாதமாக பயணிகள் வருகை மிகவும் குறைவானது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிக்கு கடந்த வாரத்திலிருந்து வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

மேலும், கடந்த மாதத்தில் ஆட்கள் மிகவும் குறைந்து பெரும்பாலான நாட்கள் வெறிச்சோடியபடி இருந்த ஆழியார் மற்றும் டாப்சிலிப் உள்ளிட்ட இடங்களுக்கு, கடந்த வாரத்திலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.அதிலும், ஆழியார் மற்றும் வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும், ஆழியார் சோதனை சாவடியில் நிறுத்தி, வனச்சரகர் புகழேந்தி தலைமையிலான வன குழுவினர் தீவிர சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கின்றனர்.

மேலும், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, வனத்திற்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்புகின்றனர். இந்த மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வன பூங்காவில் குவியும் மக்கள்

ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில், கடந்த பிப்ரவரி மாதத் துவக்கத்திலிருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததால் தற்காலிகமாக கவியருவி மூடப்பட்டது. இதனால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள், வன சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால், பலரும் ஆழியார் மற்றும் அதன் அருகே உள்ள இயற்கை காட்சி பகுதிகளுக்குட்பட்ட வன பூங்காவிற்கு சென்று, இயற்கை காட்சியை ரசித்து தங்கள் பொழுதை கழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், அங்கும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post கோடை விடுமுறையை முன்னிட்டு ஆழியார், வால்பாறை, டாப்சிலிப் வரும் சுற்றுலா வாகனங்கள் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Val Para ,Tapsiliph ,Pollachi ,Annimalayas Tigers ,Walbara ,Dinakaran ,
× RELATED கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி...