×

வில்லியனூர் அருகே சானிட்டரி நாப்கினை அழிக்கும் சூலா மண் அடுப்புகள் தயாரிப்பு பணி தீவிரம்

*34 ஆயிரம் பேருக்கு வழங்க ஏற்பாடு

புதுச்சேரி : வில்லியனூர் அருகே சானிட்டரி நாப்கினை அழிக்கும் அடுப்புகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பெண்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்பட்ட பின் குப்பைகளில் தூக்கி வீசப்படுகிறது. இவைகள் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

அங்கு இந்த நாப்கின்கள் மக்குவது கிடையாது. ஆகையால் இதனை அழிப்பது அரசுக்கு மிகவும் கடிமான செயலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12.3 மில்லியன் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுவதாக சுற்றுச்சூழல் குழு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆர்கானிக் இல்லாத சானிட்டரி நாப்கின் ஒவ்வொன்றும் நான்கு பிளாஸ்டிக் பைகளுக்கு சமம். அது மக்கி அழிவதற்கு பல ஆயிரம் ஆண்டாகிறது.

இதனால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. நாப்கின் பேடுகளை அழிக்க மத்திய அரசு பல மாநிலங்களில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புதுவையில் நாப்கின்களை பயன்படுத்தும் பெண்கள் அதனை குப்பை தொட்டியில் கொட்டாமல் தங்கள் வீடுகளிலேயே எரித்து அழிப்பதற்கு புகை ஏற்படுத்தாத சூலா மண் அடுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நலிந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 34 ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக அடுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி வில்லியனூர், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில் அருகே டெரகோட்டா கைவினை கலைஞர் பத்ம முனுசாமி குழுவினர் இந்த அடுப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அடுப்புகள் ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடியது.

இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு கொளுத்தினால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பலாகிவிடும். சாம்பலை கீழ்ப்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முதற்கட்டமாக 300 அடுப்புகள் செய்யப்பட்டு வருகிறது. பிறகு படிப்படியாக அடுப்புகள் செய்யப்பட்டு டிஆர்டிஏ மூலமாக பெண்களுக்கு வழங்கப்படும்.

The post வில்லியனூர் அருகே சானிட்டரி நாப்கினை அழிக்கும் சூலா மண் அடுப்புகள் தயாரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Villianur ,Dinakaran ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை