×

திருவாரூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடரணும்

*விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதலை தொடர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், நெல் பயிருக்கு அடுத்தப்படியாக உளுந்து, பச்சைப்பயறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது. மேலும், தென்னை ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நெல் கொள்முதல் நடைபெறுவது போல் தற்போது டெல்டா மாவட்டங்களிலும் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண்மை வணிக வரிதுறை மூலம் மாவட்டத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரவைக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.108.60க்கு அடுத்த மாதம் (ஜூன்) 30ம் தேதி வரையில் இந்த கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் கொள்முதலுக்கு கொண்டு வரப்படும். அரவைக் கொப்பரை ஈரப்பதம் 5 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் எனவும், விற்பனைக் குழு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை அணுகி பதிவு தங்களது அரவைக் கொப்பரை விற்பனை செய்யலாம் என்றும், இதற்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் கொண்டு செல்லும் கொப்பரை கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் இலக்கு முடிந்து விட்டதாக கூறி விற்பனைகூட அலுவலர்கள் திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி கூறுகையில், தற்போது பெய்து வரும் கோடை மழையால் உளுந்து, பச்சை பயறு மற்றும் பருத்தி, எள் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் கொப்பரை தேங்காயும் கொள்முதலும் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது வேதனைக்குரியது.

தஞ்சை மாவட்டத்தில் 5 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் பாதி அளவு கூட திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. 3 ஒழுங்குமுறை விற்பனை கூட்டங்களிலும் மொத்தம் 400 டன் அளவிற்கு மட்டுமே கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்றுள்ளது. தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் பணி நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 டன் அளவிற்காவது கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகமும், ஒழுங்குமுறை விற்பனை கூடமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post திருவாரூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடரணும் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி