×

திருவண்ணாமலை மாட வீதியில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு-இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில், கான்கிரீட் சிமெண்ட் சாலை மற்றும் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் தேரோடும் மாட வீதியை தரமான கான்கிரீட் சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி, மாடவீதியில் தற்போதுள்ள குடிநீர் பைப் லைன், வீடுகளுக்கான பகிர்மான பைப்லைன் அமைத்தல் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள், கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் மாற்றி அமைக்கவும், இடையிடையே எவ்வித பழுது பார்ப்பு பணிக்காகவும் சிமெண்ட் சாலையை சேதப்படுத்தாதபடி, சாலையோரம் பைப் லைன்கள் அமையவும் நகராட்சி சார்பில் ₹3.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன் முதற்கட்டமாக, பெரிய தெருவில் பைப்லைன் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பே கோபுர வீதியில் அண்ணாமலையார் கோயில் மதிற்சுவரை ஒட்டி பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், மதில் சுவரையொட்டி பைப் லைன் அமைத்தால், அதன் உறுதித்தன்மை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி, பே கோபுர வீதியில் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியை நேற்று கலெக்டர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டார்.

அப்போது, பே கோபுர வீதியில் கோயில் மதில் சுவர் பகுதியில் அமைக்கப்படும் குடிநீர் பைப்லைன் பணியை அதன் எதிர்புறத்துக்கு மாற்றி அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
பேகோபுரம் தெருவில் உள்ள பாதாள சாக்கடை ஆள் இறக்கு குழிகளை அதே இடத்தில் வலுப்படுத்தி அமைக்கவும், இப்பணிகளை இந்த மாத இறுதிக்குள் விரைந்து முடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.ஆய்வின்போது, நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் முரளி, உதவி ேகாட்ட பொறியாளர் ரகுராமன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை மாட வீதியில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு-இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Mada road ,Tiruvannamalai ,Thiruvannamalai Mata Road ,Tiruvannamalai Mata Road ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...