×

கருங்குளம் அருகே சின்னார்குளத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி-அருகில் செல்லாமல் இருக்க கம்பு தடுப்பு வேலி அமைப்பு

செய்துங்கநல்லூர் : கருங்குளம் அருகே சின்னார்குளத்தில் தூண்களில் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கருங்குளம் அருகே சின்னார்குளத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்கத் தொட்டி, மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனை அகற்றி விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதிய தொட்டி கட்டுவதற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நமக்குநாமே திட்டத்தின் கீழ் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், ரூ.18 லட்சத்தில் 10 சதவீதம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் செலுத்தினால் மட்டுமே பணிகளை தொடங்க முடியும் என கூறப்படுகிறது.

கிராம பஞ்சாயத்தில் பணம் இல்லாத நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது பழைய நீர்த்தேக்கத் தொட்டியின் கான்கிரீட் தூண்களில் விரிசல் விழுந்து இடிந்து விழும் அபாயத்தில் காட்சியளிக்கிறது. இதையடுத்து அதனருகில் யாரும் செல்லாதபடி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றி கம்புகளை கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சின்னார்குளம் கிராமத்தில் இருந்து ராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், மாற்றுப்பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கும் மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கருங்குளம் அருகே சின்னார்குளத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி-அருகில் செல்லாமல் இருக்க கம்பு தடுப்பு வேலி அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chinnarkulam ,Karunkulam - Reed ,Karinganallur ,Karunkulam ,Sinnarkulam ,Karunkulam - Rye ,Dinakaran ,
× RELATED கீழ வல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி...