×

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்..ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய கூழ் வகைகள் வழங்க ஏற்பாடு!!

சென்னை : தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2023- 24 ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த பட்ஜெட்டில் உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே உழவர்கள் காய்கறி மூட்டையோடும், கீரைக் கட்டோடும் வந்து விடுகிறார்கள். மதியம் வரை அவர்கள் தங்கள் காய்கறிகளையும், பழங்களையும் விற்பனை செய்து களைத்துப் போகிறார்கள். அவர்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் வகையிலும், வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வகையிலும் தமிழ்நாட்டுக்கே உரிய தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கவும் ,வருகிற நுகர்வோர்கள் அவற்றை அருந்தி, விழிப்புணர்வு பெறவும், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 25 உழவர் சந்தையில் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அரசாணையில் இடம்பெற்றுள்ளது பின்வருமாறு..

*முதற்கட்டமாக கோவை, திண்டுக்கல் , ஈரோடு, குமரி, கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரியில் உணவகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

*மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரம்,சேலம், தேனி, திருப்பூர், திருச்சி, வேலூர் நெல்லையிலும் தொன்மை சார் உணவகம் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

*உழவர் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே தொன்மைசார் உணவகம் செயல்பட வேண்டும்.

*சிறுதானிய உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்ட அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பை, டம்ளருக்கு தடை விதிக்கப்படுகிறது.

*சிறுதானிய உணவுகள், புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பொருட்களை விற்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்..ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய கூழ் வகைகள் வழங்க ஏற்பாடு!! appeared first on Dinakaran.

Tags : Noni Sar Restaurants ,Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,Donna Sar restaurants ,Nonya Sar Restaurants ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...