×

கோவில்பட்டி அருகே நம்பிபுரம் தடுப்பணை ஷட்டர் பழுதால் வீணாகும் தண்ணீர்

கோவில்பட்டி, மே 10: கோவில்பட்டி அருகே நம்பிபுரம் தடுப்பணையில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனை தடுக்க ஷட்டர் பழுதை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அயன்ராஜாபட்டியில் இருந்து கீழ்நாட்டுக்குறிச்சி, முத்துலாபுரம், வடமலாபுரம், நம்பிபுரம், சித்தவநாயக்கன்பட்டி, விளாத்திகுளம், வைப்பார் வழியாக கடலில் சென்று வைப்பாறு கலக்கிறது. அயன்ராஜாபட்டி முதல் வைப்பார் கிராமம் வரை ஆற்றில் இருபக்கமும் 200க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள், விவசாய கிணறுகள் இருந்தன. காலப்போக்கில் ஆற்றில் மணல் அள்ளப்பட்டு விட்டதால் கிணறுகளில் நீர்மட்டம் வறண்டது.

இதனால் மழை காலங்களில் பெய்யும் மழைநீரை கூட ஆற்றில் தேக்க முடியவில்லை. இதன் காரணமாக கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 60 மைல்களுக்கு அப்பாலில் இருந்து வரும் தாமிரபரணி குடிநீரை நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. வைப்பாற்றில் பழைய நிலையை போல் மழைக்காலங்களில் போதிய நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு கீழ்நாட்டுக்குறிச்சி, நம்பிபுரம், விளாத்திகுளம் போன்ற சுமார் 11 இடங்களில் ஆற்றின் குறுக்கே பல கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாவட்டம் முழுவதும் மற்றும் கோவில்பட்டி, நள்ளி பகுதியில் பெய்த மழைநீர் கருப்பூர் பாசன கண்மாயை வந்தடைந்து நிரம்பியதால் உபரிநீர் கீழ்நாட்டுக்குறிச்சி அருகே வைப்பாற்றுக்கு வந்தது. இதனால் நம்பிபுரம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் தடுப்பணையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் வெள்ள போக்கு ஷட்டரில் தண்ணீர் கசிவு ஏற்படாத வகையில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் புஸ் வெயிலுக்கு பழுதடைந்து விட்டதால் தண்ணீர் வெளியேறுகிறது. கோடை காலத்தில் வைப்பாற்றில் தண்ணீர் பாய்ந்து சுமார் 30 வருடங்களுக்கு மேலாகிறது. தற்போது தண்ணீர் செல்வதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் தங்களால் முடிந்த அளவு தண்ணீர் கசிவதை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வரக்கூடிய பருவகாலத்திற்கு முன் ஷட்டரில் தண்ணீர் வெளியேறாத வண்ணம் ரப்பர் புஸ்சை சரி செய்ய வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க முத்துலாபுரத்தில் கூடுதலாக புதிய தடுப்பணை கட்ட வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கோவில்பட்டி அருகே நம்பிபுரம் தடுப்பணை ஷட்டர் பழுதால் வீணாகும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Nambhipuram ,Kovilbatti ,Namipuram Blockade ,Namipuram ,
× RELATED கோவில்பட்டி அருகே கோயிலின் செம்பு...