×

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு 23ம் தேதி செல்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: ரூ. 1,891 கோடியில் மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏ.சி. உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23ம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 1,891 கோடியில் ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏ.சி. உற்பத்தி ஆலைக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஏர் கன்டிசனர் மற்றும் கம்பரசர் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விழாவில் நேற்று அடிக்கல் நாட்டி பேசியதாவது: 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23ம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். இந்த நிலையில் மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனத்தை வைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்னணுவியல் துறையில் உலகளாவிய மின்னணு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் காற்றழுத்த திட்ட உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை திருவள்ளூர், மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள பெருவயல் கிராமத்தில் ரூ. 1,891 கோடியில் முதலீடு மற்றும் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த உற்பத்தியில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் 60 சதவீதத்திற்கும் மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதற்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த உறவை மேலும் வலுப்படுத்திடும் வகையில்தான் இந்த மாதம் இறுதியில் முதலீட்டு குழுவுக்கு தலைமை தாங்கி நான் ஜப்பான் செல்ல இருக்கிறேன். அங்கு முன்னணி தொழில் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு நான் அழைப்பு விடுக்க இருக்கிறேன். இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று ஒரு உயரிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன்.

தமிழ்நாடு அரசின் சார்பாக உங்கள் திட்டத்தை வெகுவாக வரவேற்கிறேன். உங்கள் வருங்கால திட்டங்களுக்கு எங்கள் ஆதரவு நிச்சயமாக தொடரும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் குழும தலைவர் யாசுமிச்சி தாசுனோகி, மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா நிர்வாக இயக்குநர் கசுஹிகோ தமுரா, சென்னையில் உள்ள ஜப்பான் துணை தூதர் திரு.டாகா மசாயுகி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு 23ம் தேதி செல்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: ரூ. 1,891 கோடியில் மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏ.சி. உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Japan ,Singapore ,World Investors Conference ,Mitsubishi A.C. ,Chennai ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...