×

பாஸாகியும் 4 பாடங்களில் பெயில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்: திருப்பரங்குன்றம் மாணவி அதிர்ச்சி

திருப்பரங்குன்றம்: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் என்றும், 4 பாடங்களில் தோல்வி என தேர்வு முடிவு வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சூரக்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதி வேல்முருகன் (29), ஆர்த்தி (19). கடந்த 2021ம் ஆண்டு ஆர்த்தி தனது 17வது வயதில் 11ம் வகுப்பை திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் முடித்து இருந்தார். அதன்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத ஆர்த்தி, கடந்த கல்வி ஆண்டில் திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் 12ம் வகுப்பு சேர்ந்து பொதுத்தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியான நிலையில் ஆர்த்தி, தனது மதிப்பெண்களை ஆன்லைனில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதில், அவர் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் அதாவது கூடுதலாக 38 மதிப்பெண்கள் பெற்றதாக வந்தது. ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்கள், கணிதத்தில் 56 மதிப்பெண்கள், இயற்பியலில் 75 மதிப்பெண்கள், வேதியியலில் 71 மதிப்பெண்கள், உயர் கணிதத்தில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 514 மதிப்பெண்கள் பெற்றதாக முடிவுகள் வெளியானது. அதுமட்டுமின்றி கணிதம், இயற்பியல், வேதியியல், உயர் கணிதத்தில் பாஸ் மார்க் எடுத்தும் பெயில் என முடிவு வெளியாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, உயர்கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பாஸாகியும் 4 பாடங்களில் பெயில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்: திருப்பரங்குன்றம் மாணவி அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags :
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...