×

பசுமை தீர்ப்பாய விதிமுறைகளை மீறும் அடுக்குமாடி குடியிருப்பு மீது கிரிமினல் வழக்குகள் பதிவு: மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை: ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள படூரில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது சுற்றுச்சூழல் மீறல் வழக்குகள் பதிவு செய்ய தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே படூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் முட்டுக்காடு உப்பங்கழி வாய்க்காலில் டேங்கர் லாரிகள் மூலம் திடக்கழிவு மற்றும் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் குப்பை அங்கே எரிக்கப்பட்டு வருவதாக புகைப்படங்களுடன் அதில் குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து இந்த பிரச்னைக்கு தீர்வுகாண விசாரணை கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. குழுவின் ஆய்வின்படி அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமோ அல்லது முறையான திடக்கழிவு அகற்றும் திட்டமோ இல்லை என கண்டறியப்பட்டது. இதனால் கிராம பஞ்சாயத்து கழிவுகளை, உப்பங்கழி மற்றும் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கொட்டி வருகிறது. இந்த பகுதிகளில் சுமார் 100 மெட்ரிக் டன் கழிவுகள் குவிந்துள்ளதாக தகவல் உள்ளது.

எனவே, கடந்தாண்டு ஆகஸ்டில் திடக்கழிவுகளை சுத்திகரிக்கும் வகையில் பயோ மைனிங் மற்றும் உயிர் உரமாக்கல் வசதிகளுடன் இடத்தை கண்டறிய அறிவுறுத்தினர். அதை தொடர்ந்து அங்குள்ள 80% கழிவுகள் காட்டாங்கொளத்தூரில் உள்ள குப்பை கிடங்கிற்கு மாற்றப்பட்டதாக உள்ளூர் தொகுதி மேம்பாட்டு அதிகாரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்தார். இருப்பினும் தற்போதுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மீண்டும் அப்பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.

படூர் பகுதியில் உள்ள சில அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டிகள் உள்ளன. அவற்றில் உள்ள கழிவுநீர் டேங்கர் லாரிகள் மூலம் நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது. இப்படி நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டும் நபர்கள் மீது நீர் மற்றும் காற்று சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததற்காக ரூ. 81.9 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post பசுமை தீர்ப்பாய விதிமுறைகளை மீறும் அடுக்குமாடி குடியிருப்பு மீது கிரிமினல் வழக்குகள் பதிவு: மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Green Tribunal ,Pollution Control Board ,CHENNAI ,Badur ,OMR ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...