×

மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் உத்தரவு தமிழ்நாட்டுக்கு 5 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்: அரசு நடவடிக்கை

சென்னை: மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்த 5 மாணவர்கள் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அலுவலர்களை இது குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுடன் உடனடியாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்கள் அவர்தம் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் கல்லூரி தேர்வுகளுக்கு தயாராகி வருவதாலும் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ள விருதுநகர், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்துவர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மணிப்பூரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மோரே தமிழ் மக்களுடனும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களது பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசால் மணிப்பூர் அரசு மற்றும் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் உத்தரவு தமிழ்நாட்டுக்கு 5 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்: அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Manipur ,CHENNAI ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…