×

2023-24 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சிஎம்டிஏ திட்டப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சிஎம்டிஏ திட்டப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் நேற்று (9ம் தேதி) சென்னையில் அண்ணாநகர் மேற்கு, ஷெனாய் நகர், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் நடந்து வரும் சிஎம்டிஏ பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில், சென்னை, அண்ணாநகர் மேற்கு 100 அடி பிரதான சாலை வி.ஆர்.மால் அருகில் ரூ. 15 கோடியில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படும்.

ஷெனாய் நகரில் 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம் ரூ. 5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். அதேபோல, கோடம்பாக்கத்தில் புலியூர் கெனால் என்று அழைக்கப்படுகிற 1.5 கி.மீ. நீள கால்வாயை ரூ. 5 கோடியில் முழுமையாக தூர்வாரி மழைக்காலங்களில் இந்த பகுதிகளில் வெள்ள சேதாரம் எதுவும் ஏற்படாமல் பராமரித்து, பாதுகாப்பதற்குண்டான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் 5 கி.மீ. நீளத்திற்கு மிதிவண்டி பாதை, கடற்கரையை தூய்மைப்படுத்துகிற பணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. 14 சட்டமன்ற தொகுதிகளில் 19 இடங்களில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் காரியத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 2023-24 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சிஎம்டிஏ திட்டப்பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : CMDA ,Minister ,Shekharbabu ,Chennai ,CMTA ,
× RELATED கார் ரேஸ் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை: அமைச்சர் சேகர்பாபு