
- திருவள்ளுவர் கோவில்
- மயிலாப்பூர்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- அறக்கட்டளைகள் திணைக்களம் அமைச்சர்
- திருவள்ளுவர் கோயில்
சென்னை: மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2022-23ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கை அறிவிப்பின் போது மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயிலுடன் இணைந்த திருவள்ளுவர் கோயிலுக்கு ரூ.15 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருப்பணிகள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி வரைபடத்தினை முழுமையாக பார்த்து திருக்கோயிலையும் ஆய்வு செய்தோம்.
இதில், திருக்கோயிலின் நுழைவாயிலை புதுப்பித்தல், பொற்றாமரை குளம் போன்ற வடிவமைப்பை உருவாக்குதல், அறம், பொருள், இன்பத்திற்குண்டான விளக்கமுறையாக பதாகைகளை உருவாக்குதல், ஏற்கனவே இந்த கோயிலில் உள்ள திருவள்ளுவர் மற்றும் வாசுகி சன்னதிகளை புதுப்பித்தல், திருவள்ளுவரின் பெற்றோர்களின் சன்னதியை புதுப்பித்தல், கருமாரியம்மன், சிவன், காமாட்சியம்மன் சன்னதிகளை புதுப்பித்தல், கூடுதலாக கோயிலின் நூலகத்தினை புதுப்பொலிவுடன் மேம்படுத்துதல், மடப்பள்ளியை புதுப்பித்தல், பக்தர்களுக்கு வாகன நிறுத்துமிடம், அர்ச்சகர்கள் குடியிருப்பை புதுப்பித்தல் என ஒட்டுமொத்தமாக கோயிலை மேம்படுத்திடும் வகையில் ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றோம்.
கோயிலின் திருப்பணிகளை அறநிலையத்துறையின் உயர்மட்டக் குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி துரிதப்படுத்தி வருகிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், உயர்மட்ட குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.