×

திருட்டு வழக்கில் ஆஜரான வாலிபர் தப்பி ஓட்டம்: போலீசாரை கண்டித்த நீதிபதி

பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஒரு லாரி திருடு போனது. புகாரின் பேரில், நசரத்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து இது சம்பந்தமாக 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த திருநெல்வேலியை சேர்ந்த பரமசிவம்(24), ராஜா(25), கல்யாணசுந்தரம்(24) ஆகிய 3 பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக ஆஜராகாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கு தொடர்பாக மூன்று பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர்.

அப்போது பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டாலின் இவ்வழக்கு தொடர்பாக ‘‘ஏன் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இவ்வளவு நாட்கள் இருந்தீர்கள்’’ என்று கண்டித்துள்ளார். அத்துடன் மூன்று பேரையும் சிறையில் அடைக்க போவதாகவும் எச்சரித்துள்ளார். இதனால் பயந்துபோன ராஜா, அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார். இதனிடையே மீண்டும் அவர்களை விசாரணைக்கு அழைத்தபோது ராஜா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரை மாஜிஸ்திரேட் கடுமையாக கண்டித்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி ராஜாவை உடனடியாக கைது செய்யவும், மற்ற 2 பேரையும் சிறையில் அடைக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

The post திருட்டு வழக்கில் ஆஜரான வாலிபர் தப்பி ஓட்டம்: போலீசாரை கண்டித்த நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Papanchatram ,Nasaratpet ,Dinakaran ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்