×

திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்றபோது விபரீதம் அரசு பேருந்து மோதி பக்தர்கள் இருவர் பலி: சிறுவன் உட்பட இருவர் காயம்; போலீசார் விசாரணை

திருத்தணி: அரசு பேருந்து மோதியதில் திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், அன்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்றனர். இவர்கள் தள்ளுவண்டியில் பெருமாள் படத்தை வைத்துக்கொண்டு பஜனை பாடல்களை பாடியபடி சுமார் 40 பேர் சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, நேற்று முன்தினம் நள்ளிரவு திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து, சென்று கொண்டிருந்த தள்ளுவண்டி மீது திடீரென எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில், அன்டப்பட்டு கிராமத்ைத சேர்ந்த ஜானகிராமன் மகன் நாராயணன்(45), குப்பனின் மகன் சீதாராமன்(20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மண்ணாங்கட்டி மகன் வடிவழகன்(37). பலராமன் மகன் முகேஷ்கண்ணன்(14) ஆகியோரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா, எஸ்.ஐ ராக்கிகுமாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், காயம் அடைந்தவர்களை உடனடியாக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கும், இறந்த இருவரையும் அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து டிரைவரை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் இரண்டு பேர் விபத்தில் சிக்கி பலியானது, அப்பகுதி மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்றபோது விபரீதம் அரசு பேருந்து மோதி பக்தர்கள் இருவர் பலி: சிறுவன் உட்பட இருவர் காயம்; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vibratitham government ,Tirupati ,Tiruthani ,Tirupathi ,Viluppuram District ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...