×

சென்னை வளர்ச்சிக் குழுமத்தின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி.கே.சேகர்பாபு இன்று (9.5.2023) சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், சென்னை, ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகளை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்துவது தொடர்பாகவும் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில், இன்று (9.5.2023) சென்னை, அண்ணாநகர் மேற்கு 100 அடி பிரதான சாலை வி.ஆர்.மால் அருகில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படும்.

சென்னை, ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அதேபோல சென்னை, கோடம்பாக்கத்தில் புளியூர் கெனால் என்று அழைக்கப்படுகின்ற 1.5 கிலோமீட்டர் நீளத்தில் இருக்கின்ற கால்வாயை ரூ.5 கோடி மதிப்பீட்டில் முழுமையாக தூர்வாரி மழைக்காலங்களில் இந்த பகுதிகளில் வெள்ள சேதாரம் எதுவும் ஏற்படாமல் பராமரித்து, பாதுகாப்பதற்குண்டான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அதேபோன்று கடற்கரையை தூய்மைப்படுத்துகின்ற பணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் களத்திற்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டுமென்று முதல்வர் உத்தரவிற்கிணங்க தொடர்ந்து இன்றைய தினத்தோடு 14 சட்டமன்ற தொகுதிகளில் 19 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மீதமுள்ள 15 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் காரியத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலே பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம் இப்படி பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் குறிப்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு மூன்று ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வடசென்னைப் பகுதியை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார். அந்த வகையில் சென்னைப் பெருநகரத்தினுடைய அளப்பரியாப் பணியில் முதல்வருடைய எண்ணங்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் தினந்தோறும் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்து, அப்பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, இந்த மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தற்போது விளையாட்டுத் துறையில் ஏற்படுத்தி வருகின்ற மாற்றங்கள் விளையாட்டுத் துறைக்காக அமைக்கப்பட இருக்கின்ற கட்டமைப்புகள், அதே போன்று விளையாட்டுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற திட்டங்களுக்காக அனுதினமும் பணியாற்றிக்கொண்டிருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமுயற்சியை மேற்கொண்டிருக்கின்றார். இதனுடைய பலன், வருகின்ற காலங்களில் ஒன்றிய அளவிலிலேயே விளையாட்டுத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கும் என்கின்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (வில்லிவாக்கம்) அ.வெற்றியழகன், (அண்ணா நகர்) எம்.கே.மோகன், (ஆயிரம் விளக்கு) டாக்டர்.நா.எழிலன், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.அமிர்தஜோதி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர்கள் கூ.பீ. ஜெயின், கிருஷ்ணமூர்த்தி, சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள்.பெரியசாமி, ருத்ரமூர்த்தி, பாலசுப்ரமணியன், மாநகராட்சி மண்டல அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறை, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சென்னை வளர்ச்சிக் குழுமத்தின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Development Group ,Minister ,Sekarbabu ,Chennai Metropolitan Development Group ,Segarbabu ,Dinakaran ,
× RELATED முதலில் டோக்கன் வாங்கியது திமுக...