×

கோடைகால மாதவிடாய் பிரச்னைகள் தீர்வு என்ன?

பொதுவாகவே கோடைகாலத்தில் உஷ்ணமும், வெப்பமும் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு உஷ்ணம் காரணமாக குறிப்பிட்ட தேதிக்கு முன்பே மாதவிலக்கு வந்திவிடும். ஒரு சிலர் உடலின் வெப்பம் தவிர்க்க அடிக்கடி குளிப்பது, எண்ணெய்க் குளியல் எடுப்பது, இளநீர், ஜூஸ், தயிர் என எடுத்துக்கொண்டு உடலை மற்ற மாதங்களைக் காட்டிலும் இன்னும் குளிர்ச்சியாகவே வைத்திருப்பதும் உண்டு. இதனால் மாதவிலக்கு தள்ளிப்போகும் நிகழ்வுகளும் நடக்கும். போலவே சுகாதாரப் பிரச்னைகளும், வியர்வை சார்ந்த அலர்ஜிப் பிரச்னைகளும் கூட ஏற்படும். என்ன செய்ய வேண்டும், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா ராஜசேகர் (MBBS, MS, Gynaecology Gynaecologist, Infertility Specialist).

‘எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கோடையின் பிடி இன்னும் அதிகமாக இருக்கும் என்றே வானிலை அறிவிப்புகள் குறிப்பிடுகின்றன. பொதுவாகவே மாதவிடாய் தள்ளிப் போனாலோ அல்லது சீக்கிரம் நிகழ்ந்தாலோ பதற்றப் படவேண்டாம். நம் மாதவிடாய் பொருத்தவரை உண்ணும் உணவு, பயணங்கள், வாழ்க்கைமுறை என அனைத்தையும் பொருத்து நிறையவே மாற்றம் பெறும். கோடைகாலம் பொருத்தவரை சுகாதாரமே பிரதானம். முதலில் சுகாதார நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை கறை ஏற்படவே இல்லை என்றாலும் நாப்கின்களை மாற்றிக்கொள்வது அவசியம். மேலும் நாப்கின்கள் மேற்புறம் கடினமாகவும், சில பிராண்டுகள் அதிகம் பிளாஸ்டிக் பயன்பாட்டுடன் வரும். அதனையும் தவிர்ப்பது நல்லது. காரணம் வெப்பமான காலநிலைக்கு பிளாஸ்டிக் மேலும் வெப்பத்தைக் கூட்டும். சிலர் வெயில் காலம், மழைக்காலம் எனில் உடையில் கரைப் பட்டுவிடுமோ என்னும் பயத்தில் இரண்டு, மூன்று நாப்கின்களை ஒரே சமயத்தில் பயன்படுத்துவது கூடாது. ஒரு சிலருக்கு நாப்கின்கள் அலர்ஜியை உண்டாக்கும், இரண்டு மூன்று நாப்கின்கள் பயன்பாடு அலர்ஜியின் வீரியத்தை அதிகப்படுத்தும். மேலும் வியர்வை காரணமாக பாக்டீரிய தொற்றும் வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.

உள்ளாடைகளில் கவனம் தேவை: ஒரு சிலர் மாதவிடாய் காலங்களுக்குத் தனி உள்ளாடைகள், மற்ற நாட்களுக்கு தனி உள்ளாடைகள் பயன்படுத்துவது வழக்கம். இதை எல்லோருமே கடைப்பிடிப்பது நல்லது. மேலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மாதவிடாய் கால உள்ளாடைகளை நிச்சயம் மாற்றிவிட வேண்டும். துவைத்துக் காய வைக்கும் பொழுதும் நன்கு வெயில் படும்படி காயவைக்க வேண்டும். முடிந்தால் வெந்நீர் கொண்டு துவைப்பது இன்னும் நல்லது. கோடைகாலத்தில் மாதவிடாய் எனில் சோர்வும், களைப்பும், உடன் மனநிலை மாற்றமான பிஎம்எஸ் பிரச்னைகளும் கூட அதிகமாக இருக்கும். அதற்கு என்ன செய்யலாம் தொடர்ந்தார் மருத்துவர் நிவேதிதா ராஜசேகர். ‘இக்காலத்தில் யோகா, இசை, மனதுக்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகளில் மனநிலையை செலுத்துவது நல்லது. அவ்வப்போது குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல், அதிகம் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ளுதல் அவசியம். சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதும் அவசியம். பொதுவாக கோடையில் சோர்வும், களைப்பும் அதிகம் உண்டாகும். உடன் மாதவிடாய் சேரும் போது மேற்கொண்டு சோர்வு உண்டாகலாம். இதனால் வெறுப்பு, எரிச்சலான மனநிலை, தேவையற்ற கோபம், அவசியமே இல்லாத வாக்குவாதங்கள் உண்டாகும். எனவே முடிந்தவரை நம்மை நாமே அமைதியாக வைத்துக்கொள்வது அவசியம். பெரும்பாலும் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது இன்னும் சிறப்பைக் கொடுக்கும்.

ஒருசிலருக்கு கோடை காலத்தில் பசி உணர்வே இருக்காது. இதில் மாதவிடாய் எனில் சிலருக்கு உடன் வயிறு உப்புசம், பசியின்மை அல்லது அஜீரணக் கோளாறுகள் உண்டாகலாம். இக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும் வயிற்றை சுத்தம் செய்யும் அல்லது தேவையற்ற நச்சுகளை நீக்கும் எலுமிச்சை, புதினா ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், கிரீன் டீ இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் உணவு உண்ணப் பிடிக்கவில்லை எனில் சூப் போன்றவைகள் எடுத்துக்கொள்ளலாம். போலவே அதிக கொழுப்புகள், கலோரிகள் நிறைந்த வெளிப்புற ஆகாரங்கள், பீட்சா, பர்கர் உள்ளிட்டவைகளையும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வேலையில் கவனம் தேவை. கோடை சோர்வும், எரிச்சலும், உடன் மாதவிடாய் கால பிரச்னைகளும் ஏற்படும்போது மனநிலை மாற்றம் உண்டாகும். இதனால் வேலையில் சில தவறுகள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம், நண்பர்களை உடன் வைத்துக்கொண்டு உதவி பெறுவது தவறல்ல. நிதானமும், பொறுமையும் அவசியம்.
– ஷாலினி நியூட்டன்

The post கோடைகால மாதவிடாய் பிரச்னைகள் தீர்வு என்ன? appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் பாஜக சார்பில் அதிக...