×

அலங்காநல்லூர் அருகே கோயில் திருவிழா காணிக்கையாக விளைபொருட்கள் தந்த பக்தர்கள்-அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் விளைபொருட்களை பக்தர்கள் பலரும் காணிக்கையாக செலுத்தினர்.அலங்காநல்லூர் அருகே உள்ள அதலை கிராமத்தில் பழம் பெருமை வாய்ந்த சோனை ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் கள்ளழகர் மதுரையில் திருவிழாவை முடித்துக்கொண்டு அழகர்கோவிலுக்கு புறப்படும் நாளில் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று குருபூஜை விழா விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் உள்ள ராமலிங்க சுவாமிக்கு நேர்த்திக்கடனாக சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள் நெல் மற்றும் நவதானியங்களை காணிக்கையாக செலுத்தினர்.

இத்திருவிழாவில் மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்றனர். இவர்கள் ஒரே இடத்தில் கூடி வழிபாடு செய்வது இக்கோயிலில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.

ராமலிங்க சுவாமி திருக்கோயில் குருபூஜை விழாவை முன்னிட்டு பக்தரக்ள் பால்குடம் எடுத்தனர். மேலும் சிலர் முதுகில் அலகு குத்தி, தேர் இழுப்பது உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அதலை கிராம மக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதேபோல் பாலமேடு சாத்தியார் அணை அருகே உள்ள கல்லுமலை கந்தன் கோயிலிலும் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

The post அலங்காநல்லூர் அருகே கோயில் திருவிழா காணிக்கையாக விளைபொருட்கள் தந்த பக்தர்கள்-அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர் appeared first on Dinakaran.

Tags : Alankanallur ,-alaku ,kuthi ,Athalai ,-Alaku kuthi ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை