×

திருமங்கலத்தில் தெருவிளக்குகள் அனைத்தும் எல்இடிக்களாக மாற்றப்படும்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ஆதவன் அதியமான், ஆணையாளர் டெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் முத்து வரவேற்றார். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளின் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின்படி திருமங்கலம் நகரில் 1,952 தெருவிளக்குகளை பொதுமக்களின் நலன்கருதியும், நகராட்சியின் நிதிநிர்வாகத்தினை கருதியும் எல்இடி விளக்குகளாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, திருமங்கலம் நகரிலுள்ள அனைத்து தெருவிளக்குகளையும் விரையில் எல்இடி விளக்குகளாக மாற்றுவது எனவும் இதற்கு ரூ.237.72 லட்சம் ஒதுக்கீடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் நகரின் விரிவாக்கப்பகுதிகளில், புதிதாக 534 எல்இடி தெருவிளக்குகளை மாநில நகர்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.107.70 லட்சம் மதிப்பில் அமைப்பதும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் நிதியை நகராட்சிக்கு கடனாக வழங்குவதுடன், இக்கடனை 6 ஆண்டுகளுக்குள் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதே போல் நகராட்சி சுகாதாரத்திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவுநீர் உறிஞ்சு வாகனம் வாங்குவது எனவும், 15வது நிதிக்குழு மானியத்தில் 2022-23ல் ரூ.10.60 லட்சம் மற்றும் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் முறையே பேவர்பிளாக் சாலை மற்றும் தார்சாலை பணிகளை மேற்கொள்ளவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக திருமங்கலம் ரயில்வே பீடர் ரோட்டில் யூனியன் அலுவலகம் முதல் ரயில்வே கேட் வரையில் குண்டும்குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post திருமங்கலத்தில் தெருவிளக்குகள் அனைத்தும் எல்இடிக்களாக மாற்றப்படும்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,President ,Ramya Muthukumar ,Deputy ,Aadhavan Athiyaman ,Commissioner… ,Dinakaran ,
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...