×

இலங்கைக்கு மாற்றப்பட்டதால் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் புறக்கணிப்பு?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 6 நாடுகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 50 ஓவர் வடிவில் செப்டம்பர் 2ம் தேதி முதல் 17ம்தேதி வரை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அங்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா தெரிவித்தார். இதையடுத்து இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் மற்ற போட்டிகளை தனது நாட்டிலும் நடத்தும் திட்டத்தை பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்தது. ஆனால் தொடரை வேறு இடத்திற்கு மாற்றுவதில் பிசிசிஐ உறுதியாக இருந்தது.

பிசிசிஐயின் இந்த முடிவுக்கு இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இருந்து மாற்றப்பட்டு இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகவும் ஈரப்பதமான சூழ்நிலைகள் வீரர்களுக்கு காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இலங்கை தேர்வாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே இலங்கைக்கு தொடர் மாற்றப்பட்டதால் பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் புறக்கணித்தால் யுஏஇ அணியை சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உலக கோப்பையும் புறக்கணிப்பா?

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் மோதும் போட்டியை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. இதற்கு ஐசிசி சம்மதிக்காது. இதனால் ஆசிய கோப்பை தொடர் மாற்றப்பட்ட கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையையும் புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் பிசிபி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post இலங்கைக்கு மாற்றப்பட்டதால் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் புறக்கணிப்பு? appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Asia Cup ,Sri Lanka ,Dubai ,16th ,Asia ,Dinakaran ,
× RELATED மகளிர் ஆசிய கோப்பை 2024: ஜூலை 21ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்!