×

சேலம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு லாரி டிரைவர் தீக்குளிக்க முயற்சி-மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை முயற்சி

சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வீட்டிற்கு செல்ல வழிப்பாதை வழங்க கேட்டு லாரி டிரைவர், உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மாற்றுத்திறனாளி மகனுடன் வந்த தாயும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.இதில், ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை பெரியவடகாம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மாதேஷ் (40) மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த அவர், திடீரென பையில் கேனில் மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார், ஓடி வந்து தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

தொடர்ந்து மாதேசிடம் விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு பெரியவடகாம்பட்டியில் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் உள்ள வீட்டில் தாய் புனிதாவுடன் வசித்து வருவதுடன், விவசாயமும் செய்து வருகிறேன். எங்கள் வீட்டிற்கு செல்ல அரசு புறம்போக்கு நிலம்தான் வழிப்பாதையாக உள்ளது. தற்போது புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வழிப்பாதை இல்லாமல் அடைத்து வருகின்றனர். இதனால் தனது வீட்டிற்கு செல்ல பாதை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்ட நிலையில், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக உள்ளனர். கடந்த 6 மாதமாக ஒவ்வொரு அலுவலகமாக சென்று போராடி விட்டேன். ஆனால் இன்னும் தீர்வு கிடைக்காததால், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் கலெக்டர் அலுவலகம் வந்தேன், என்றார்.

இதேபோல், சேலத்தான்பட்டியைச் சேர்ந்த கோமதி (45), அவரது மகன் மாற்றுத்திறனாளி லோகபாரதி (25) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவுவாயில் பகுதிக்கு வந்தபோது, திடீரென கோமதி, மண்ணெண்ணெய் பாட்டிலை பையில் இருந்து வெளியே எடுத்தார். இதைப்பார்த்த போலீசார், மண்ணெ்ணெய் பாட்டிலை பறித்துக்கொண்டு விசாரணை நடத்தினர். போலீசார், கோமதியிடம் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து, மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர் மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று, மனு அளித்தார். சேலம் வீரபாண்டி இனாம்பைரோஜி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவாயில் பகுதியில் வந்ததும், பெட்ரோல் கேனை வெளியே எடுத்தார். இதை கண்ட அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, கேனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் ஊர் பொதுக்கிணற்றை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்ததாகவும், பலமுறை புகார் கொடுத்தம் நடவடிக்கை இல்லாததால், தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவரை எச்சரித்து, மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post சேலம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு லாரி டிரைவர் தீக்குளிக்க முயற்சி-மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Collector ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில்...