×

கோடை உழவு செய்வதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும்-வேளாண் அதிகாரி தகவல்

வேலூர் : விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறியதாவது: கோடை உழவு என்பது சிறப்பு கருவிகளை பயன்படுத்தி ஆழமாக உழுதலாகும். முதற்பயிர் சாகுபடி ஆனி, ஆடி மாதத்தில் துவங்கி 2வது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. மாசி-வைகாசி வரை நிலம் உழவின்றி தரிசாக பாதிப்புக்குள்ளாகிறது. உழவின் எண்ணிக்கையும் ஆழமும் களைகளின் தீவிரத்தை பொறுத்தது.

15-20 நாட்கள் இடைவெளியில் பருவமழை வருவதற்கு முன் இரண்டு முறை கோடை உழவு செய்யவேண்டும். வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கட்டிகள் உடைந்து மண் அரிப்பு தடுக்கப்பட்டு சத்துக்கள் இழப்பும் குறைகிறது. மழைகாலத்தில் பெய்யும் மழைநீர் வடிந்து வீணாகாமல் மண்ணுக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டமும் உயர்கிறது. கோடைஉழவில் ஆழமாக உழுவதால் கடினமான மேலோட்டமான மேல் அடுக்கு உடைந்து மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண்ணின் ஊடுருவல் திறன் மற்றும் ஊடுருவக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.

கோடை உழவு மேற்கொள்வதால் குளிர்ச்சி காரணமாக மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. கோடை உழவில் மண்ணில் கரிமப் பொருட்களின் கலவை துரிதப்படுத்துவதால் பயிர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் மூலம் வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவடைகிறது.

மழைநீரை உறிஞ்சும் திறன் மண்ணில் அதிகரிப்பதால் வளி மண்டல நைட்ரஜன் நீரில் கலந்து மண்ணுக்குள் சென்று மண் வளத்தை அதிகரிக்கிறது. இதனால் பயிர் செழித்து வளர்ந்து மகசூல் அதிகரிக்கும்.பெரும்பாலான பூச்சிகள் வெப்பமான கோடையில் மண்ணின் மேல் அடுக்கு அல்லது குச்சிகளுக்கு அடியில் உறங்கும். கோடை உழவு செய்யும் போது மண்ணை கவிழ்ப்பதால் சூரியகதிர்கள் மண்ணில் நுழைகிறது. மண்ணின் மூலம் பரவும் பூச்சி, முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிகிறது. அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சிகளால் ஏற்பாடும் பாதிப்பு குறைகிறது.

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதும் குறைவதால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது. நெல்லில் இலையுறை கருகல், துங்ரோ நோய், மஞ்சள் குட்டை நோய் போன்ற நோய்கள் பரவுவதற்கு காரணியாக உள்ள பூஞ்சானங்கள் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் நெல் தாள்களிலும், களைச்செடிகளிலும் புகலிடமாக இருந்துவருகின்றன. கோடை உழவின் காரணமாக இவை அழிக்கப்படுகின்றன. கோடை உழவு மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை நூற்புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கோடை உழவு செய்வதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும்-வேளாண் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Virinchipuram ,Agricultural Research Station ,Coordinator ,Thirumurugan ,
× RELATED வேலூர் சைபர் கிரைம் போலீஸ்...