×

ரஸ்சல் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை: கேகேஆர் கேப்டன் ராணா நெகிழ்ச்சி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட், ஹர்ஷித் ராணா 2, சுயாஷ் ஷர்மா, நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 180 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியால் 4 ஓவர் முடிவில் கேகேஆர் அணி 36 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து நேதன் எல்லிஸ் வீசிய பந்தில் குர்பாஸ் 15 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து கேப்டன் ராணா களமிறங்கி சிறப்பாக ஆடினார். ஜேசன் ராய் 24 பந்துகளில் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வெங்கடேஷ் அய்யர், ராணாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் ராகுல்சாஹரின் சுழலில் வெங்கடேஷ் அய்யர் 11 ரன், இன்னொரு பக்கம் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே நிதிஷ் ராணா ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 3 ஓவரில் கொல்கத்தா வெற்றிபெற 36 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட, சாம்கரன் வீசிய 19வது ஓவரில் ரஸ்சல் 3 சிக்சர்கள் விளாசினார். இதனால் கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிபெற 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் 3 பந்துகளில் 2 ரன்னும், 4வது பந்தில் 2 ரன்னும் சேர்த்தனர். 5வது பந்தில் ரஸ்சல் ரன் அவுட்டானார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்படவே, ரிங்கு சிங் பவுண்டரி விளாசினார். இதன் மூலம் கேகேஆர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 42 ரன் எடுத்த ரஸ்சல் தேர்வு செய்யப்பட்டார். வெற்றிபெற்றது குறித்து கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், “நான் பேட்டிங் செய்யும்போது ஒருமுனையில் நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வெங்கடேஷ் அய்யரின் கால்களில் காயம் ஏற்பட்டது.

இதனால் மிடில் ஓவர்களில் ஒரேயொரு ஓவரில் டார்கெட் செய்ய முடிவு செய்தோம். இதுவரை 10 போட்டிகளில் ஆடிவிட்டோம். ஆனால் அனைவருமே ரஸ்சலிடம் இருந்து ஒரேயொரு சிறந்த இன்னிங்ஸ்-க்காகவே காத்திருந்தோம். ஏனென்றால் அவர் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினால், அடுத்து என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் ஒவ்வொரு போட்டியிலும் ரஸ்சலை களமிறக்கினோம். எங்களை வெற்றிபெற வைக்க போகிறவர் நீங்கள் தான் என்று ரஸ்சலுக்கு நம்பிக்கை அளித்து வந்தோம். இன்றையப் போட்டியில் அது நிகழ்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் சொதப்பிவிட்டார்கள். இந்த பிட்ச்சில் 165 ரன்களுக்கு மேல் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் தான் கோபமடைந்தேன். அதேபோல் ரிங்கு சிங்கிடம், ஒவ்வொரு முறையும் நம்பிக்கையாக இருக்குமாறு கூறினோம். அவர் சாதித்தவற்றை இனி எத்தனை வீரர்களால் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை’’ என்றார்.

The post ரஸ்சல் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை: கேகேஆர் கேப்டன் ராணா நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Russell ,KKR ,Rana Leschi ,Kolkata ,IPL ,Punjab ,Dinakaran ,
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...