×

பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி முதலமைச்சர். மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்..!!

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி ச. நந்தினி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பள்ளிக்கல்வித் துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவி ச. நந்தினி முதலமைச்சரை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இன்றையதினம் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது முதலமைச்சர் அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையானஅனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது முதல்வர் பேசியதாவது; கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து என்று பல நிகழ்ச்சிகளில் தான் கூறி வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். படிப்புதான் சொத்து என்று நினைத்து படித்தேன் என்று மாணவி நந்தினியும் கூறியதை கண்டு பெருமையடைந்தேன். எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள் தான் நம் தமிழ்நாட்டின் வளர்ச்சி. இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார், இ.ஆ.ப., உடனிருந்தனர்.

The post பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி முதலமைச்சர். மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்..!! appeared first on Dinakaran.

Tags : Nandini ,Chief Minister ,G.K. ,stalin ,Chennai ,Nandini Chief Minister ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...